தவெகவினர் மீது பாய்ந்தது வழக்கு.. கோவைக்கு விஜய் வந்த அடுத்த நாளே சம்பவம்!
உதயநிதி ஸ்டாலின் வருகையினை முன்னிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக கொடியினை சேதப்படுத்தியதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய்யை வரவேற்க நேற்று கோவையில் திரளான ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்ததில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு மற்றும் பொருட்கள் சேதப்படுத்தியதற்காக நூற்றுக்கணக்கானோர் மீது கோவை மாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தவெக தலைவர் விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையம் அருகே கூடிய அக்கட்சியினரும், ரசிகர்களும், பொருட்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேற்று (ஏப்ரல் 26) மாலை நடைபெற்றது.
முதல் நாளான நேற்றைய தினம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த 8000 பேர் கலந்து கொண்டனர். இன்று கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 8000 பேர் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக, நேற்று கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜய்யை வரவேற்க அக்கட்சியினர் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அவரை வரவேற்பதற்காக, விமான நிலையம் முதல் சித்ரா சிக்னல் வரை ஏராளமான கட்சியினரும், ரசிகர்களும் திரண்டிருந்தனர்.
இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில், விஜய்யை பார்க்க வந்த தவெகவினரும், ரசிகர்களும் விமான நிலைய வளாகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. மேலும், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை அவர்களை இயக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் அனைவர் மீதும் கோவை மாநகர போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்தனர். மேலும், தவெக கோவை மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், உதயநிதி ஸ்டாலின் வருகையினை முன்னிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக கொடியினை சேதப்படுத்தியதாக கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்லமுத்து, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய இருவர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் விஜய்யை பின் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 133 வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.