கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் - தனித்தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் பேச்சு!
அடுத்த தேர்தலுக்கான ஆயுதமா?

இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை ஒன்றிய அரசு நினைத்துப்பார்க்க வேண்டும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆகிவற்றுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்; அதுவே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டு பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இது முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.
கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். கடல் நீர் இன்று ஏன் சிவப்பாக இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர் சிந்திய இரத்தத்தால் என்று சொல்ல வேண்டிய கவலையான நிலைமையில் தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.