2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் பாமக இணையப் போவதாக தகவல்கள்!
திமுக,பாமக கூட்டணி இணைவை திட்டவட்டமாக மறுத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் பாமக இணையப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
திமுக கூட்டணி மிக வலிமையாக உள்ளது; கூட்டணிக் கட்சிகளும் திமுகவுடன் இருப்பதில் உறுதியாக இருக்கின்றன தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் யாருமே எதிர்பாராத வகையில், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிகரமாக அமைந்துள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என கூறி வந்த அதிமுக, மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் அசுர பலத்தில் திமுக உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதலாக தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் திமுக கூட்டணியில் சேர, எதிர் முகாமில் உள்ள கட்சிகளும் போட்டிப் போட்டு வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. குறிப்பாக, தேமுதிக, பாமக கட்சிகள் திமுக கூட்டணியில் வர விரும்புவதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
ஒருவேளை, திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால், அங்கு விசிக இருக்காது என சொல்லப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் இதனை திருமாவளவனும் பல முறை கூறியிருக்கிறார். வட மாவட்டங்களில் பெருவாரியான சமூகத்தின் கணிசமான வாக்கு வங்கியை பாமக கொண்டிருந்த போதிலும், பட்டியலின மக்களின் வாக்குகளை வைத்திருக்கும் விசிகவை கைவிட திமுக தலைமை விரும்பவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
இந்த சூழலில்தான், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலினிடம், 'திமுக கூட்டணியில் பாமக இணையப் போவதாக பேசப்படுகிறதே..' எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஸ்டாலின் கூறுகையில், "அது வதந்தி என்று நீங்களே கூறிவிட்டீர்கள். அப்படி எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. திமுக கூட்டணி மிக பலமாக உள்ளது. திமுகவுடன் இருப்பதில் எங்கள் கூட்டணிக் கட்சிகளும் உறுதியாக உள்ளன" எனக் கூறினார்.
மேலும், அதிமுகவும், பாஜகவும் ரகசியக் கூட்டணியில் இருந்து வருவதாக தான் சொன்னதை அண்மையில் அவர்களே நிரூபித்துக் காட்டிவிட்டதாக கூறிய ஸ்டாலின், ஏற்கனவே இரு முறை மக்களால் நிராகரிக்கப்பட்ட இக்கூட்டணி, இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.