ஆளுநர்,சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மருத்துவமனை அத்தியட்சகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்!
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகிகளுக்கான வெளிநாட்டுப் பயண விடுமுறைக்கான அனுமதி!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மருத்துவமனை அத்தியட்சகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஊழல் இடம்பெறக் கூடாது என்பதற்காகத்தான் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன.
அவ்வாறான இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டால் அதைப் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக சுகாதாரத் திணைக்களத்தின் கீழான சாரதிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்காமை தொடர்பில் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தை வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் ஆதரித்து கருத்துத் தெரிவித்தார்.வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகிகளுக்கான வெளிநாட்டுப் பயண விடுமுறைக்கான அனுமதி ஒழுங்குபடுத்துதல், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை விடுதிக்கான கட்டடத்தின் தேவைப்பாடு, வடக்கு மாகாண மருத்துவத்துறையிலுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் ஆளணி மறுசீரமைப்பு, மருத்துவமனை பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு அதற்குரிய தீர்வுகளும் இதன்போது கண்டறியப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.