ஜனாதிபதி , பிரதமர் ஹரினி அமரசூரியவின் முடிவுக்காக, நாடாளுமன்ற அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல்கள் !
.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கல்வித் தகுதிகளின் நம்பகத்தன்மையினை ஆராய்வதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரினி அமரசூரியவின் முடிவுக்காக, நாடாளுமன்ற அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகுதி தொடர்பாக சர்ச்சைக்கு மத்தியில் பதவி விலகியமை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நற்சான்றிதழ்களை சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், அனைத்து உறுப்பினர்களின் கல்வித் தகுதியை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பலர் வலியுறுத்தினர்.
எவ்வாறாயினும், தவறான கல்விச் சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்ட அம்சங்களை விளக்கி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யு.ஆர். டி சில்வா, கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஒருவர் ஒரு பதவி அல்லது நன்மையைப் பெறுவதற்காக மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, பின்னர் அந்த தவறான சான்றுகளாக நிரூபிக்கப்பட்டால், அது ஒரு தெளிவான மோசடி செயலாகும்.
இச் செயல் ஏமாற்றுதல் மற்றும் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவை இரண்டும் தண்டனைச் சட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் பதவியைப் பெற்றிருப்பின், சம்பளத்தைப் பெற்றிருந்தால், வழங்கப்பட்ட ஆவணங்கள் மோசடியானது என்று பின்னர் வெளிப்பட்டால், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதுடன், அவர்கள் பெற்ற அனைத்து நன்மைகளையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகரின் பிரச்சினையை பொறுத்தவரையிலும், ஜனாதிபதி, ஜப்பானிய தூதரகத்தை இலகுவாக தொடர்புகொண்டிருக்க முடியும். அத்துடன், சான்றிதழில் தவறிழைக்கப்பட்டிருப்பதை ரன்வல விளக்கி, அதைப் பெறுவதற்கு உதவி கேட்டிருக்க முடியும்.
மின்னஞ்சல் மூலம் மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு பல்கலைக்கழகத்திடம் கோரப்பட்டிருக்கலாம், அது போதுமானதாக இருக்கும்.தூதரகத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டிருந்தால், அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.