'பேய்' கிராமங்களுக்கு மக்களை காசு கொடுத்து அழைக்கும் இத்தாலி அரசு..
"இதுபோன்ற கிராமங்கள் தான் பேய் கிராமங்கள்" அதாவது ஆங்கிலத்தில் Ghost villages என்று அழைப்பார்கள்.

உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் நாம் யோசித்துக் கூட பார்க்காத பிரச்சினைகள் இருந்து வருகிறது. அதைச் சமாளிக்க உலக நாடுகள் பலவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இங்கே இத்தாலியில் அப்படி தான் ஒரு வினோதமான பிரச்சினை எழுந்துள்ளது. அதைச் சமாளிக்கத் திட்டம் ஒன்றையும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒரு வினோதமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது ஒருபக்கம் நகரங்களில் மக்கள் மூச்சுவிட முடியாத அளவுக்குக் கூட்டம் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் கிராமங்களில் மக்களே இல்லாத சூழல் ஏற்படுகிறது. இதனால் கிராமங்களில் மக்கள் நடமாட்டமே இருப்பதில்லை.
பேய் கிராமங்கள்!
அதாவது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புதிய வாய்ப்புகளுக்காகவும் மக்கள் அதிகளவில் நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். இதனால் கிராமங்களில் மக்களே இல்லாத சூழல் நிலவுகிறது. பல வெளிநாடுகளில் இந்த சிக்கல் நிலவுகிறது. இதுபோன்ற கிராமங்கள் தான் பேய் கிராமங்கள் அதாவது ஆங்கிலத்தில் Ghost villages என்று அழைப்பார்கள்.
ரூ.92 லட்சம் தரோம் (100,000 யூரோக்கள்)
இந்த பிரச்சினையைச் சமாளிக்க வடக்கு இத்தாலியில் உள்ள ஒரு ட்ரென்டினோ மாகாணம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது அங்குள்ள ஆல்பைன் பகுதியில் இடம் பெயர்வோருக்கு ரூ.92 லட்சம் (100,000 யூரோக்கள்) தரப்போவதாக அறிவித்துள்ளனர். இதில் ரூ.74 லட்சம் (80,000 யூரோக்கள்) அங்குள்ள வீட்டைப் புதுப்பிக்கத் தரப்படும். அதேநேரம் ரூ.18.5 லட்சம் (20,000 யூரோக்கள்) புதிய சொத்தை வாங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கண்டிஷன் இதுதான்.
அட இது சூப்பர் திட்டமா இருக்கே.. உடனே ஒரு டிக்கெட்டை போடுங்க என நீங்கள் சொல்லலாம். உண்மையில் இதில் சில கண்டிஷன்களும் உள்ளன. அதாவது இத்தாலி நாட்டினர் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இத்தாலியர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும். மேலும், அவர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் அங்கு வசிக்க வேண்டும்.. அல்லது அந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட வேண்டும்.
ஒருவேளை அதைச் செய்யத் தவறினால் மானிய தொகை 92 லட்சத்தை உடனடியாக இத்தாலி அரசுக்குத் திரும்பத் தர வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள 33 பேய் நகரங்கள் இந்த திட்டத்திற்காகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வரும் வாரங்களில் எந்த நகரங்கள் எல்லாம் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்பது இறுதியாகும்.
இது முதல்முறை இல்லை!
அதேநேரம் இத்தாலியில் இதுபோல ஒரு இடத்திற்குச் சென்றால் பணம் தருகிறோம் என்று அந்நாட்டு அரசு அறிவிப்பது இது முதல்முறை இல்லை. கடந்த வாரம், இத்தாலியின் மத்தியப் பகுதியான அப்ருஸ்ஸோவில் அமைந்துள்ள பென்னே என்ற நகரத்தில் கைவிடப்பட்ட வீடுகள் ஒரு யூரோ அல்லது ஒரு டாலருக்கும் குறைவான விலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளிலும் மக்கள்தொகை சரிவு பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் அது மிக மோசமாகவே இருக்கிறது. ஐரோப்பாவில் வேலை செய்யும் வயதில் உள்ளவர்களின் மக்கள்தொகை 2040க்குள் 19% சதவிகிதம் குறையும் என்று கூறப்படுகிறது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இதன் தாக்கம் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிக்கல் இதுதான்
மக்கள்தொகையில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரிப்பது இத்தாலிக்குப் பெரிய சிக்கலைத் தருவதாக இருக்கிறது. ஏனென்றால் வயதானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஓய்வூதியம், சுகாதாரப் பராமரிப்புக்கான செலவுகள் அதிகரிக்கும். அதேநேரம் பொருளாதாரம் சுருங்க ஆரம்பிக்கும். இது எந்தவொரு நாட்டிற்கும் பெரிய சிக்கலையே தரும். இதன் காரணமாகவே மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் எனப் பல நாடுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.