கும்பமேளாவில் வைரலான ’கண்ணழகி’ மோனலிசா... பாலிவுட்டில் நடிக்க தேடி வந்த வாய்ப்பு!
,

மகா கும்பமேளா மூலம் பிரபலமடைந்த மோனலிசா என்ற பெண்ணிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. திரிவேணி சங்கமம் என்ற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தை சுற்றியே ’மகா கும்பமேளா’ நடைபெறுகிறது. இது உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் இடம்பெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வு வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மகா கும்பமேளாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து புனித நீராடுகின்றனர். இந்நிலையில் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்ற மோனலிசா என்ற பெண் ஒருவர் இணையதளம் மூலம் பிரபலமடைந்தார். பெண் துறவி போல காட்சியளித்த மோனலிசா ’பிரவுன் பியூட்டி’ என நெட்டிசன்கள் அழைத்து வந்தனர்.
மோனலிசா குறித்து பலரும் இணையத்தில் வீடியோ பதிவிட்டு அவரை பிரபலமாக்கினர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோனலிசா திருவிழா காலங்களில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்து வந்துள்ளார். மோனலிசா மிகவும் பிரபலமடைந்த நிலையில், அவரை நேரில் காண கும்பமேளாவிற்கு பலர் வரத் தொடங்கினர். பல யூடியூப் சேனல்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் அவரது வியாபாரத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அவரது தந்தை மோனலிசாவை சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அனுப்பி வைத்தார், இதனைத்தொடர்ந்து சொந்த ஊருக்கு சென்ற மோனலிசா தனியாக யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தனது மேக்கப் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளத்தில் மோனலிசா பகிரும் வீடியோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்நிலையில் மோனலிசாவிற்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது படத்தில் நடிக்க மோனலிசாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்சனோஜ் மிஸ்ரா வெளியிட்டுள்ள பதிவில், “மகா கும்பமேளாவில் ருத்ராக்ஷ மாலை விற்று வரும் பெண்ணின் வீடியோவை பார்த்தேன். அவரது அழகான கண்கள் மூலம் பிரபலமடைந்துள்ளார். அவருக்கு எனது படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப் போகிறேன். உங்களது கருத்து என்ன?” என பதிவிட்டுள்ளார். சனோஜ் மிஸ்ரா Modi ka pariwar என்ற படத்தை இயக்கியுள்ளார். ருத்ராக்ஷ மாலை விற்ற பெண் இணையதளம் மூலம் பிரபலமாகி பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.