நாயை விட்டு வயதான தம்பதியை கடிக்க வைத்து சித்தரவதை; சென்னையை உலுக்கிய பயங்கரம்!
நாய் உரிமையாளரான கவியரசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளர்ப்பு நாயை ஏவிவிட்டு வயதான தம்பதியை கடிக்க வைத்து, இளைஞர் சித்தரவதை செய்து ரசித்த சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.
சென்னை கொளத்தூர், புத்தாகரம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (27). இவர், தனது வீட்டில் விலை உயர்ந்த 'ராட்வில்லர்' நாய் வளர்த்து வருகிறார். நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாக்கிங் போகும் போது கவியரசன் தன்னுடைய நாயையும் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று இரவு (ஏப்ரல் 2) வழக்கம் போல கவியரசன் தனது நாயை அழைத்துக்கொண்டு அருகில் வாக்கிங் சென்றுள்ளார்.
அப்போது, அதேப் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (70) என்பவர் தனது மனைவியுடன் வாக்கிங் வந்துள்ளார். முதியவர்களை கண்டதும் அந்த நாய் திடீரென பாய்ந்து மாரியப்பனை கடித்துள்ளது. பின்னர், அருகில் இருந்த அவரது மனைவியையும் கடித்துள்ளது.
தன்னுடைய நாய் வயதான தம்பதியை கடிப்பதை அருகில் இருந்து பார்த்தும் அதை விரட்டி விடவோ அல்லது அவர்களை காப்பாற்றவோ முன்வராமல் கவியரசன் வேடிக்கை பார்த்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நாயை ஏவிவிட்டு வயதான தம்பதியை மீண்டும் மீண்டும் கடிக்க வைத்து அவர்கள் கதறுவதையும், அழுது புலம்புவதையும் கண்டு ரசித்துள்ளார்.
சுற்றி சுற்றி வந்து கடித்த நாய் முதியவரின் வேஷ்டியை கடித்து இழுத்து மாரியப்பனை விடாமல் காயப்படுத்தி உள்ளது. இதனால் வலி தாங்க முடியமாலும், நாயின் வெறித்தனமான தாக்குதலால் பீதி அடைந்தும் வயதான தம்பதி அலறி துடித்தனர். இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இரக்கமே இல்லாத இளைஞர் கவியரசனை தட்டிக்கேட்டபோது அவர்களை அவதூறு வார்த்தைகளால் பேசி அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், 'நான் ஒரு வழக்கறிஞர். எனக்கு காவல்துறை உயர் அதிகாரிகளை தெரியும்' என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
இதற்கிடையே முதியவரை காப்பாற்ற முயன்ற ரமேஷ் என்பவரையும் நாய் தொடையில் கடித்துள்ளது. மேலும் அதே பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக வசித்து வரும் நபர் உள்ளிட்ட 3 பேரை நாய் கடித்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாய் உரிமையாளரான கவியரசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.