"பகலில் குடும்பப் பணி; இரவில் எழுத்துப்பணி" - Hall of Fame எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்,
சிங்கப்பூர்ப் பெண்களுக்கான Hall of Fame எனும் தலைசிறந்தவர்களுக்கான அங்கீகாரம்!

சிங்கப்பூர்ப் பெண்களுக்கான Hall of Fame எனும் தலைசிறந்தவர்களை அங்கீகரிக்கும் பட்டியலில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் உள்ளிட்ட 6 பெண்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 198 பெண்கள் அந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். 75 வயது திருமதி கமலாதேவி, பிரபல எழுத்தாளர், நாடக ஆசிரியர்.
அவர் 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். 18 மேடை நாடகங்களையும் 300 வானொலி நாடகங்களையும் இயற்றியுள்ளார். 5 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
தேசிய நூலக வாரியமும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு எழுத்துப் பட்டறைகளையும் அவர் நடத்தியிருக்கிறார்.
தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் எழுதும் ஆற்றல் பெற்றவர் திருமதி கமலாதேவி.
அவரின் செம்பவாங் நாவல் சிங்கப்பூரின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகளில் வெளியிடபட்டுள்ளன.
"ஒரு தாயாகவும் மனைவியாகவும் இருந்துகொண்டு எழுத்துத்துறையில் மிளிர்வது அவ்வளவு எளிதல்ல. பகல் நேரத்தைப் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்துக்காகவும் அர்ப்பணிப்பேன். அமைதியான இரவு நேரங்களில் அதிகம் எழுதுவேன். பல சவால்களுக்கு மத்தியில் எழுத்துத்துறையில் எனக்கிருக்கும் ஆர்வம் ஒருபோதும் குறைந்ததில்லை" என்று திருமதி கமலாதேவி அரவிந்தன் CNA Women செய்திப் பகுதியோடு பகிர்ந்துகொண்டார்.
பாரதியார் எழுத்துக்கள் தாம் தம்மை இந்தத் துறைக்கு ஈர்த்ததாக அவர் சொன்னார்.
"பெண்கள் பல்வேறு பொறுப்புகளைச் சுமக்கும்போது எதிர்கொள்ளும் போராட்டங்களைக் கவனித்தேன். அதிலிருந்து அவர்கள் மீண்டுவரும் ஆற்றலையும் பார்த்தேன். அவர்களின் வலிமையையும் உறுதியையும் பதிவுசெய்வதற்கான வழியாக எழுத்துத்துறை அமைந்தது" என்றார் அவர்.

⭐ 51 வயது லியூ பின் (Liu Bin). இவர் அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெற்ற விஞ்ஞானி, பொறியியலாளர். ⭐ 67 வயது ஐவி எங் (Ivy Ng). மருத்துவரான இவர் SingHealth, KK மகளிர், சிறார் மருத்துவமனையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.
⭐ 65 வயது ஜூன் ரஸ்டென் (June Rusdon). முன்னோடி குழந்தைக் கல்வியாளர், தொழில்முனைவர்.
⭐ 84 வயது கொன்ஸ்டன்ஸ் சியர்ஸ் (Constance Sheares). சிங்கப்பூர்க் தேசிய அரும்பொருளகத்தின் ஆரம்பக்காலக் கலைக் காப்பாளரான இவர் 1976இல் தேசிய அரும்பொருளகக் கலைக் காட்சியகத்தை நிறுவ உதவினார்.
⭐ 77 வயது விவியன் கோ (Vivien Goh). இசைக் கல்வியாளரான இவர் 1980இல் சிங்கப்பூர்த் தேசிய இளையர் இசைக்குழுவை நிறுவினார். தற்போது இது ஆசியாவின் சிறந்த இளையர் இசைக்குழுக்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.