”இளையராஜாவிற்கான கேட்காமலேயே அவருக்கான உரிமையை கொடுக்க வேண்டும்”... நடிகர் அட்டகத்தி தினேஷ் பேச்சு!
“நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அனைவரும் வரவேற்க தான் செய்வார்கள். அரசியல்வாதிகளும் வரவேற்பார்கள். ஆனால் மக்கள் தான் முடிவு செய்வார்கள்”

தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவரான நடிகர்களில் ஒருவர் தினேஷ். கடந்த ஆண்டு வெளியான 'லப்பர் பந்து' திரைப்படத்தில் கிரிக்கெட் ஆட்டக்காரராக மக்களால் கெத்து தினேஷாக கொண்டாடப்பட்டார். சென்னை ஆலந்தூரில் நேற்று (ஏப்ரல்.27) சார்பட்டா பரம்பரை சிலம்பாட்ட குழு சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தினேஷ் கலந்து கொண்டார். அவர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய தினேஷ், “விளையாட்டு என்பது நமது கவனத்தை ஒரு இடத்தில் குவிக்கும். சின்ன வயதிலிருந்து இருக்கக்கூடிய பிரச்சனை சென்னையில் மைதானங்கள் நிறைய இல்லை.
இப்போது எல்லாம் பணம் கொடுத்து விளையாடக்கூடிய மைதானங்கள் தான் இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் நிறைய மக்கள் வந்து கலந்துகொள்ளக்கூடிய இவ்வளவு பெரிய போட்டியை நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் பெரிதாக போட்டிகள் நடக்க வேண்டும். சின்ன வயதில் நான் விளையாடிய நிறைய மைதானங்கள் இப்போது இல்லை.
விளையாட்டு என்பதை வெறும் வெற்றியாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல், பங்கேற்பிற்காவும் விளையாட்டு ஆர்வத்திற்காகவும் உடல் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படக்கூடிய விஷயமாக விளையாட்டை பார்க்க வேண்டும். எலோஒரும் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாட வேண்டும்.
விஜய் அரசியல் வருகை மற்றும் அஜித்தின் கார் பந்தயம் குறித்த பத்திரிகையாளரின் கேல்விக்கு , “அவரவர்களின் விருப்பத்தின் படி எண்ணத்தின்படி செயல்பாடுகள் இருக்கிறது. கடவுள் படைப்பில் எல்லோரும் தனித்துவமானவர்கள். அவர்களுடைய செயல்பாடுகள் மக்களுக்கு எந்த அளவில் நல்லதாக இருக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும்.
அது நல்லதாக அமையும் என்று நம்புகிறேன்” என்று பதில் அளித்தார். மேலும், “நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அனைவரும் வரவேற்க தான் செய்வார்கள். அரசியல்வாதிகளும் வரவேற்பார்கள். ஆனால் மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்றும் பதில் கூறினார்.இளையராஜாவின் காப்புரிமை விவகாரம் குறித்த கேள்விக்கு, “'லப்பர் பந்து’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’பொட்டு வச்ச தங்க குடம்’ பாடலுக்காக கங்கை அமரன், இளையராஜா இருவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். உரிமம் சார்ந்த ஒப்பந்தம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
இசையமைத்தவர்களுக்கான உரிமம் எப்போதும் சென்றுகொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் இசை என்பது இசையமைப்பாளரின் எண்ணத்தில் தான் உருவாகிறது. அதனை மதிக்க வேண்டும். இளையராஜா இழப்பீடு கேட்பது தார்மீகப்படியும் தர்மத்தின் படியும் சரியான ஒன்று. அதை அவர் கேட்காமலேயே அவருக்கு நாம் தர வேண்டும்” என்று தெரிவித்தார்.
விளையாட்டுத் துறைக்காக தமிழ்நாடு அரசு செய்யக்கூடிய விஷயங்கள் குறித்த கேள்விக்கு, ”தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. சென்னையில் இன்னும் நிறைய மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இப்போது நிறைய டர்ஃப் மைதானங்கள் தான் இருக்கின்றன. விளையாட்டு தொடர்பாக நல்ல விஷயங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்” என கூறினார்.
மேலும், “விளையாட்டு தொடர்பான திரைப்படங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. லப்பர் பந்து வந்தது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படுவதால் பெரிதாக மக்களை சென்றடைவது கஷ்டமாக இருக்கிறது. டிஜிட்டல், சாட்டிலைட் உரிமங்கள் எல்லாம் பெரிய படத்திற்கு தான் ஆதரவாக இருக்கிறார்கள்.
’லப்பர் பந்து’ படத்தை மக்கள் கொண்டாடியதால் இந்த உரிமங்கள் எளிதாக விற்கப்பட்டது. நிறைய விளையாட்டு திரைப்படங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. மக்கள் கொண்டாடுவதுதான் அதற்கான வெற்றியை தீர்மானிக்கிறது” என தெரிவித்தார்.
அடை மொழி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”நடிகர்களுக்கு திரைப்படத்தின் பெயரில் அடைமொழி வருவது இயல்பு. எனக்கு அட்டக்கத்தி தினேஷ் என்பது மிகவும் பிடிக்கும் அதைவிட கெத்து தினேஷ் என்பதும் மிகவும் பிடிக்கும் ஆனால் என்னுடைய தாய் தந்தை வைத்த தினேஷ் என்ற பெயர்தான் முதலில் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, “அடுத்த நிகழ்ச்சிக்கே எப்படி போகப்போகிறேன் என தெரியாமல் இருக்ககிறேன். எனக்கு அமைதியான வாழ்க்கை தான் தேவை” என கலகலப்பாக பதில் கூறினார்.
முன்னதாக அஜித்குமாரின் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு ஆதரவாக இயக்குநர், இசையமைப்பாளர் கங்கை அமரன் சமீபத்தில் பேசியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.