மெரிக்க பயணம் நிறைவு: இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி!
,

அதிபராக இரண்டாம் முறையாக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் , அமெரிக்கா வந்த பிரதமர் மோடி அவருடன் நேற்று இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார். அவரது இந்த பயணத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் தொழில்நுட்பம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, எரிசக்தி , பரஸ்பரம் மக்களுக்கு இடையேயான கூட்டுறவு உள்ளிட்ட மிக விரிவான அளவிலான அம்சங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி புதன் கிழமையன்று பிரான்ஸில் இருந்து அமெரிக்கா வந்தார். அதிபராக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கா வந்த பிரதமர் மோடி, அவரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களின் சந்திப்பின் போது ராணுவம், எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முக்கியமான துறைகளில் பரந்தர அளவிலான ஆக்கப்பூர்வமான கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டது. இரு தரப்பிலும் பரஸ்பரம் நலனுக்கான பிராந்திய, சர்வதேச முன்னேற்றங்கள் குறித்த கண்ணோட்டங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "அதிபர் டிரம்ப் உடன் சிறப்பான சந்திப்பை நடத்தினேன். இரு தரப்பிலான இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-அமெரிக்க நட்புணர்வை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். அமெரிக்க அதிபர் டிரம்ப், (Make America Great Again) அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவது குறித்து அடிக்கடி குறிப்பிட்டார். இந்தியாவில் நாம் வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை நோக்கி பணியாற்றி வருகின்றோம். அமெரிக்காவின் பொருளில் அதனை இந்தியாவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவது என பொருள் கொள்ளலாம். வளர்ச்சிக்கான மெகா கூட்டணியாக இந்தியா-அமெரிக்க கூட்டாணமை திகழும்,"என்று கூறியுள்ளார்.
மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் பேசிய டொனால்டு டிரம்ப், "எஃப்-35 ஜெட் ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது,"என்றார். பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறி்த்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "அதிபர் டிரம்பின் அழைப்பின்பேரில் அமெரிக்கா வந்த பிரதமர் மோடியின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த, மிகவும் பலன் தரக்கூடிய பயணம் இப்போது முடிவடந்துள்ளது. அதிபர் டிரம்ப் இரண்டாம் முறையாக பதவி ஏற்றபின்னர் பிரதமரின் முதல் பயணம் இதுவாகும். அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற மூன்று வாரங்களுக்குள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுக்கு இரண்டு தலைவர்களும் எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றனர் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் ," என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடி, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிக்கேல் வால்ட்ஸ், உளவுத்துறை பிரிவு இயக்குநர் துளசி கப்பார்ட் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினார். இது தவிர ஸ்பேஸ்எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க், இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி பிரான்ஸில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். செயற்கை நுண்ணறிவு செயல்பாடு உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி , பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இந்தியா-பிரான்ஸ் சிஇஓ அமைப்பின் 14வது கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.