ரகசிய டீல்? இஸ்ரேலில் என்ட்ரியான பாகிஸ்தான் உளவுத்துறை.. அம்பலமான கள்ள உறவால் இந்தியாவுக்கு சிக்கல்?
பாகிஸ்தானை பொறுத்தவரை யூதர்களின் நாடாக உள்ள இஸ்ரேலை தனி நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை.

பாகிஸ்தான் இன்னும் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. பாகிஸ்தான் பொதுவெளியில் இஸ்ரேலை எதிர்த்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். இப்படியான சூழலில் தான் திடீரென்று பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள், இஸ்ரேலுக்கு ரகசிய விசிட் செய்ததன் பின்னணி குறித்த பரபரப்பு வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே நீண்டகால பகை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்காதது தான். அதோடு பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் உள்ளது. இதுவும் ஒரு காரணமாகும்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான மாறிமாறி தாக்கி கொண்ட நிலையில் தற்போது அது போராக மாறி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரை தொடர்ந்து 15 மாதங்கள் போர் நடந்தது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் கடுமையாக தாக்கியது. இதற்கு பாகிஸ்தான் உள்பட இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இஸ்ரேல் போன பாகிஸ்தான்
உளவுத்துறை இதனால் இஸ்ரேல் - இஸ்லாமிய நாடுகள் இடையேயான உறவு என்பது இன்னும் மோசமானது. இதற்கு பாகிஸ்தானும் விதிவிலக்கல்ல. பாகிஸ்தானும் காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்து இருந்தது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள் இஸ்ரேலுக்கு சென்ற தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இருந்து மொத்தம் 10 பேர் குழு இஸ்ரேலுக்கு சென்றுள்ளது. அதாவது இஸ்ரேல், ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் மற்றும் பக்ரைன் நாடுகள் இணைந்து ஷரகா என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இது ஒரு என்ஜிஓ அதாவது தொண்டு நிறுவனமாகும்.
என்ன காரணம்?
இந்த ஷரகா தொண்டு நிறுவனத்தின் முக்கிய பணி என்பது இஸ்ரேலுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே இருக்கும் மோதலை குறைத்து நல்லுறவை ஏற்படுத்துவதாகும். இந்த தொண்டு நிறுவனத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் அங்கு சென்றுள்ளனர். இது பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் - இஸ்ரேல் இடையே ரகசிய உறவு உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் வெளிப்படையாக சில சமயங்களில் இஸ்ரேலை விமர்சனம் செய்து வருகிறது.
அம்பலமான ரகசிய உறவு
அதோடு இஸ்ரேலுடனான உறவை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. மேலும் இப்போது பாகிஸ்தான் இன்னும் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்காத நிலையில் அந்த நாட்டுக்கு ஐஎஸ்ஐ உளவுப்பிரிவினர் சென்று இருப்பது என்பது இருநாடுகளுக்கு இடையேயான ரகசிய உறவை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த ரகசிய உறவு இல்லாவிட்டால் தங்களை ஒரு நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான் உளவு அதிகாரிகளை ஒருபோதும் இஸ்ரேல் அனுமதித்து இருக்காது. ஆனால் இஸ்ரேலுக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை கால் வைத்திருப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான கள்ளஉறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இஸ்ரேலை அங்கீகரிக்காத பாகிஸ்தான்
மேலும் பாகிஸ்தானை பொறுத்தவரை யூதர்களின் நாடாக உள்ள இஸ்ரேலை தனி நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தங்கள் நாட்டு மக்கள் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் பாஸ்டோர்ட்டுகளில் கூட இஸ்ரேல் தவிர உலகின் அனைத்து நாடுகளிலும் இது செல்லுப்படியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருநாடுகள் இடையே நல்லுறவு என்பது இல்லாத சூழலில் இந்த சம்பவம் பேசும்பொருளாகி உள்ளது. அதேவேளையில் இஸ்ரேல் போர் புரியும் காசாவை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை பாகிஸ்தான் தனி நாடாக அங்கீகரித்து உள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. அதோடு காசாவில், இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த போருக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பத்திரிகையாளர் சொல்வது என்ன?
இப்படியான சூழலில் இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரிகள் சென்று இருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரிகளுடன் சென்ற பாகிஸ்தான் பத்திரிகையாளர்களில் ஒருவரான இஸ்ரேல் ஹயோம், ‛‛நாங்கள் உலகம் முழுவதும் நடக்கும் விஷயங்களின் உண்மை மற்றும் தகவல்களை தேடி வருகிறோம். எங்களுக்கு என்று எந்த எல்லைகளும் கிடையாது. எங்களுக்கான அறிவு தேடலின் ஒருபகுதியாக இங்கு வந்துள்ளோம். இஸ்ரேலும் பாகிஸ்தானும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் நல்ல நண்பர்களாக மாறுவார்கள்''என்று கூறியுள்ளனர்.
வெளியுறவுத்துறைக்கே தெரியாதாம்
மேலும் இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் மக்கள் செல்ல அனுமதியில்லை என்பதால் தற்போது அங்கு சென்றவர்களின் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளிலும் இஸ்ரேல் நாட்டுக்கான முத்திரை என்பது வைக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், ‛‛இஸ்ரேலுக்கு தங்கள் நாட்டு பிரதிநிதிகள் செல்வது பற்றிய எந்த தகவலும் இல்லை.. இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறியுள்ளது. ஒரு நாட்டின் உளவுப்பிரிவு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ள நிலையில் அதுபற்றி தெரியாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, இன்னும் கூட பாகிஸ்தான் - இஸ்ரேலுடன் ரகசிய உறவை பின்பற்ற நினைக்கிறது என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
இந்தியாவுக்கு பாதிப்பா?
மேலும் இஸ்ரேலுக்கு சென்ற பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளால் இந்தியாவுக்கு ஏதேனும் சிக்கல் உள்ளதா? அதற்கு இல்லைஎன்று தான் கூற வேண்டும். ஏனென்றால் தற்போதைய பாகிஸ்தான் அதிகாரிகளின் விசிட் என்பது இஸ்ரேல் - பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனம் சார்ந்ததாகும். இருப்பினும் கூட நம் நாட்டுடன் பாகிஸ்தான் தீவிர மோதலை கடைப்பிடித்து வருவதால் இந்த விசிட் பற்றிய விஷயத்தை நம் நாடும் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.