குரு கிராமத்தை குறி வைத்துள்ள கூகுள் நிறுவனம்! 5,50,000 சதுர அடி பரப்பிலான அலுவலகம்.
.

குருகிராம்: கூகுள் நிறுவனம் பெங்களூருவை தொடர்ந்து குருகிராம் பகுதியில் மிகப்பெரிய அலுவலக இடத்தை கையகப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் குருகிராமில் 5,50,000 சதுர அடி பரப்பிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
தி எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் டேபிள் ஸ்பேஸ் என்ற நிறுவனத்திடம் கூகுள் நிறுவனம் இந்த அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. முதலில் 5,50,000 சதுர அடி அலுவலக இடத்தை பயன்படுத்துவது என்றும் பின்னர் மேலும் 2 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை பெற்றுக் கொள்வது என்றும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவிலான அலுவலக இடங்களை தேடி வந்தது. முதல் கட்டமாக பெங்களூருவில் அலுவலக இடத்தை வாங்கிய கூகுள் தற்போது குருகிராம் பகுதியில் வாங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரை கூகுள் நிறுவனம் குரு கிராம் பகுதியில் 7 லட்சம் சதுர அடி பரப்பிலான அலுவலகத்தை செயல்படுத்தி வந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் அதனை மூடிவிட்டது.
தற்போது மீண்டும் இந்தியா மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் கூகுள் தங்களுடைய டேட்டா மையங்களை இங்கே நிறுவுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் தான் இந்த நிறுவனம் பெங்களூருவின் ஆரம்பிக் நகரில் 6, 49,000 சதுர அடி அளவிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்தது. ஒரு சதுர அடி 62 ரூபாய் என்ற மாதாந்திர வாடகை விகிதத்தில் இந்த குத்தகை எடுக்கப்பட்டது. 3 ஆண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஹைதராபாத்தில் ஆறு லட்சம் சதுர அடி இடத்தையும், பெங்களூரின் மற்றொரு பகுதியில் 1.3 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தையும் குத்தகைக்கு எடுத்தது. இந்தியாவில் கூகுளை தவிர ஐபிஎம் மற்றும் சியான் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களுடைய செயல்பாட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதற்காக அலுவலக இடங்களை கையகப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் அண்மை காலமாக அலுவலக இடங்களுக்கான ரியல் எஸ்டேட் சந்தை வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 85 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் சீனாவை கடந்து இந்த துறையில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.