வழக்கறிஞர் கொலை வழக்கு: இருவர் கைதான நிலையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
மார்ச் 30ஆம் தேதி கார்த்திக்கின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சென்னை, விருகம்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் வழக்கறிஞர் தலையில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (45). இவர் ஒரு அரசியல் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக இருந்து வந்தார். விருகம்பாக்கத்தில் இவரது நண்பரான கார்த்திக் என்ற கார் ஓட்டுநரின் வீட்டுக்கு அடிக்கடி இவர் வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மார்ச் 30ஆம் தேதி கார்த்திக்கின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டில் வெங்கடேசன் பிணமாகக் கிடந்ததைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, வெங்கடேசனின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வெங்கடேசனின் மனைவி காவல்துறையிடம், தன் கணவனின் மரணம் குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையிலும், உடற்கூராய்வு முடிவுகளின் அடிப்படையிலும் வெங்கடேசன் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு கிடந்த வீட்டில் இருந்த கார்த்திக்கை காணாத நிலையில், காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. மேற்கொண்ட விசாரணையில் இந்த வழக்கில் கார்த்திக்கின் நண்பரான ரவிக்கும் (42) தொடர்பு இருக்கலாம் என காவல்துறை கருதியது.
தலைமறைவாக இருந்த அவர்கள் இருவரையும் தேடி வந்த காவல்துறை, நேற்று (ஏப்ரல் 2) காலை மதுரவாயல் பைபாஸ் அருகே வைத்து இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து உயிரிழந்த வெங்கடேசனின் கார், ஒரு அலைப்பேசி, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியதில், “வெங்கடேசன் கார்த்திக் வீட்டிற்கு மார்ச் 27ஆம் தேதி சென்றுள்ளார். இருவரும் அப்போது மது அருந்தினர். அப்போது இருவரும் ஒரு வழக்கு தொடர்பாகப் பேசியபோது வாக்குவாதம் எழுந்துள்ளது.
அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் கார்த்திக், வெங்கடேசனை வெட்டி கொலை செய்துள்ளார். தொடர்ந்து, வெங்கடேசன் காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்,” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திக் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் மீது ஏற்கனவே 10 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் புலப்பட்டுள்ளது.