முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு - அஜித் பி பெரேரா
,

முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த சட்டமூலத்தில் காணப்படும் ஒருசில தொழில்நுட்ப சிக்கல்களுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எவரேனும் நபர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியிருந்தால் அவற்றை சட்டத்தின் ஊடாக அரசுடமையாக்கிக் கொள்ளும் இயலுமை காணப்படுகிறது. அத்துடன் குறித்த சொத்தின் முதல் உரித்தாளருக்கு சொத்தை உரித்தாக்கவும் முடியும். குற்றம் தொடர்பில் முறையான காரணிகள் மற்றும் சாட்சியங்கள் இருக்க வேண்டும்.
அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட அனைவரும் முறையற்ற வகையில் சொத்து சேர்த்திருந்தால் அது சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே பேசப்பட்டது.
மோசடி செய்யப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடமையாக்குவது தொடர்பில் 2015.05.01 ஆம் திகதியன்று ஜனாதிபதி சட்டத்தரணி வெலியமுன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த செயலணியில் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய நீதியரசர் யசந்த கோதாகொட உட்பட13 பேர் சேவையாற்றினார்கள். இந்த சட்டம் உருவாக்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டு நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டு, இந்த சட்ட வரைவு பணிகள் நிறைவுப்படுத்தப்பட்டன. இவ்வாறான பின்னணியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஆகவே இந்த சட்டமூலத்தை எவரும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு இந்த சட்டமூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் காணப்படும் ஒருசில பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
இந்த சட்டமூலத்தில் உறுப்புரை 53, 55, 56 உட்பட பல பிரிவுகளில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதிப்புக்களில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த சிக்கல்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த சட்டம் சிறந்த முறையில் இயற்றப்பட வேண்டும் என்றார்.
பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். இதற்கான முதல் கட்டமாகவே முறையற்ற வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பான சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தண்டனை சட்டக்கோவை, பொது சட்டம், ஊழல் சட்டம் ஆகிய சட்டங்களில் காணப்படும் குறைப்பாடுகள் இந்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் முறையற்ற வகையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் இந்த புதிய சட்டத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும்.
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மோசடி செய்யப்பட்ட அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதி அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கடந்த காலங்களில் அழுத்தமாக வலியுறுத்தினார்கள். மக்களின் அபிலாசைக்கு அமைவாகவே இந்த சட்டம் சர்வதேச கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை சட்டத்தின் பிரகாரம் அரசுடமையாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சட்டத்தின் பிரகாரம் விசேட பொறிமுறைகள் வகுக்கப்படும் என்றார்.