தருமபுரி அரசு மருத்துவமனையில் 'அடாவடி'! 'குழந்தையை பார்க்க காசு'? தந்தையை தாக்கிய காவலர்கள்!
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட மனைவியை பார்க்க வந்த கணவனிடம் காசு கேட்டு காவலர்கள்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையை காண வந்தவரை காவலர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் தந்தையை காவலர்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (30). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கோதாவரி (21). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆன கோதாவரி பிரசவத்திற்காக கடந்த 18ம் தேதி செவ்வாய்க்கிழமை பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் (தாய் சேய்) மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அன்றைய தினமே கோதாவரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தையை பார்க்க வரும் போதெல்லாம் ஒப்பந்த காவலர்கள் பணம் கேட்டதாகவும், பணத்தை கொடுத்த பிறகே குழந்தையை பார்க்க சின்னசாமி அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார். இந்நிலையில், குழந்தையை பார்க்க வந்த போதெல்லாம் சின்னசாமி ஒப்பந்த காவலர்களுக்கு பணம் கொடுத்து வந்ததாக தெரிவிக்கிறார்.
இந்த சூழலில் சின்னசாமி இன்று (மார்ச் 21) தனது தாயுடன் மற்றொரு குழந்தையை தூக்கிக் கொண்டு மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அப்போது பணம் கொடுத்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று ஒப்பந்த காவலர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சின்னசாமி '' என்னிடம் பணம் இல்லை, நான் ஏடிஎம்மில் இருந்து எடுத்து வந்து தருகிறேன்'' என்று கூறிவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது சின்னசாமியை இரண்டு ஒப்பந்த காவலர்கள் படிக்கட்டில் வைத்து சட்டையை கிழித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
சின்னசாமி சத்தம் போடவே மக்கள் கூடியதால் சுதாரித்துக் கொண்ட காவலர்கள் மருத்துவமனையில் பாதுகாப்பில் இருக்கும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து வந்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட மனைவியை பார்க்க வந்த கணவனிடம் காசு கேட்டு காவலர்கள் அடாவடியில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சின்னசாமியை மருத்துவமனை காவலர்கள் கும்பல் கூடி தாக்கும் வீடியோ காட்சியும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.