புறமுதுகு காட்டும் போராட்டம்! உஷா வேன்ஸுக்கு முதுகை காட்டும் கிரீன்லாந்து மக்கள்! இந்திய வம்சாவளிக்கு இப்படி ஒரு பிரச்சனையா!
நாய் வண்டி பந்தையத்தை பார்ப்பதற்கு பதிலாக Pituffik பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்தை பார்வையிடும் வகையில் பயண திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது.

கிரீன்லாந்தில் நடக்கும் விளையாட்டு போட்டியை கண்டுகளிக்க இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை அதிபரின் மனைவியுமான உஷா அந்நாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது வருகையை புறக்கணிக்கும் விதமாக, அந்நாட்டு மக்கள் முதுகை காட்டி நிற்க திட்டமிட்டிருக்கின்றனர்.
கிரீன்லாந்து பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தொடர் சர்ச்சை பேச்சுகளே உஷா வேன்ஸ் எதிர்ப்புக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
கிரீன்லாந்தில் வழக்கமாக மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நாய் வண்டி பந்தயங்கள் நடைபெறும். நாய்கள் குழுவாக சேர்ந்து பனி சறுக்கு வண்டியை இழுத்து செல்வதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் கிரீன்லாந்து வருவார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு உஷா வேன்ஸ் தனது மகனுடன் கிரீன்லாந்து செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பயணத்தில் அடுத்தடுத்து முக்கிய தலைகட்டுகள் இணைந்தன.
உஷாவின் கிரீன்லாந்து பயணம்:
குறிப்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் (Michael Waltz), எரிசக்தி துறை செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் மைக் லீ (Mike Lee) ஆகியோர் கிரீன்லாந்து வருவதாக சொல்லப்பட்டது. இவர்களின் வருகை கிரீன்லாந்து மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டிருக்கிறது. காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வாய் துடுக்கான பேச்சுதான்.
அப்படி என்ன பேசினார் டிரம்ப்:
டிரம்ப் அடிப்படையில் ஒரு ரியல் எஸ்டேட் முதலை. கடந்த 2019ம் ஆண்டு இவர் அதிபராக இருந்தபோது கிரீன்லாந்தை விலை கொடுத்து வாங்க இருப்பதாக பேசியிருந்தார். இப்போதும் இதையே பேசி வருகிறார். கிரீன்லாந்தை வாங்குவதை 'ஒரு பெரிய ரியல் எஸ்டேட் டீல்' என்று டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக சில மொக்கையான காரணங்களையும் கூறியுள்ளார்.
கிரீன்லாந்து ஆர்டிக் பிரதேசத்தை ஒட்டி இருக்கிறது. இங்கு ஏராளமான ராணுவ ஆய்வுகள் நடக்கின்றன. நீர் மூழ்கி கப்பல்களும் இருக்கின்றன. ஆர்டிக் பகுதி ரஷ்யா கைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக கிரீன்லாந்தை நாங்கள் கைப்பற்றுகிறோம் என டிரம்ப் கூவி வருகிறார்.
உண்மை என்ன?
ஆனால், விஷயம் அறிந்தவர்கள் டிரம்ப் சொல்வதில் பாதிதான் உண்மை என்று கூறிகிறார்கள். பூகோள ரீதியாக ஆர்டிக் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உண்மைதான். எனினும் அதற்காக மட்டுமே டிரம்ப் அதை கைப்பற்ற நினைக்கவில்லை. மாறாக கிரீன்லாந்தில் ஏராளமான கனிம வளங்கள் குவிந்து கிடக்கின்றன. இதை கைப்பற்றுவதன் மூலம் சீனாவுக்கு போட்டியாக அமெரிக்காவை வளர்த்தெடுக்க நினைக்கிறார். அமெரிக்காவை கூட அல்ல.. அமெரிக்க நிறுவனங்களை வளர்க்க நினைக்கிறார் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கிரீன்லாந்து எதிர்ப்பு:
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் உஷா வேன்ஸ் கிரீன்லாந்துக்கு போக இருந்தார். டிரம்பின் சர்ச்சை பேச்சு காரணமாக கிரீன்லாந்து மக்கள் உஷா வேன்ஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உஷா வரும்போது அவரை வரவேற்க முகத்தை காட்டாமல், திரும்பி நின்று முதுகை காட்டி எதிர்ப்பு தெரிவிக்க கிரீன்லாந்து மக்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் உஷாவும் அவருடன் வருபவர்களும் தங்களது பயண திட்டத்தை மாற்றியிருக்கின்றனர்.
பயண திட்டத்தில் மாற்றம்:
நாய் வண்டி பந்தையத்தை பார்ப்பதற்கு பதிலாக Pituffik பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்தை பார்வையிடும் வகையில் பயண திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும், கிரீன்லாந்துக்கும் இடையில் இந்திய வம்சாவளி பெண்ணான உஷா வேன்ஸ் சிக்கியிருப்பது இந்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அதிகாரப்பூர்வ பயணமாக இல்லாமல் நட்பு ரீதியிலான பயணமாக இருந்தால் உஷாவுக்கு வரவேற்பு கிடைத்திருக்குமோ என்னவோ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!