வாழை இலை சாப்பாடு ஏன்? எந்த பக்கம் எதை வைக்கணும்? பரிமாறும் முறையை அறிந்து கொள்வோம் !
வாழை இலையில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும் மற்றும் புண்களை விரைவில் குணமாக்கும்.

வாழை இலைகளில் வைக்கப்படும் சூடான உணவு பாலிஃபீனால்களை உறிஞ்சுகிறது. இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய பல நோய்களைத் தடுக்கும்.
வாழை..தமிழரின் வாழ்வியலில் செழிப்பைக் குறிக்கப் பயன்படும் சொல். அதனால் தான், "வாழையடி வாழையாக" என வாழ்த்துவார்கள். சுப நிகழ்வுகளில் அத்தனை அலங்காரங்களுக்கு முன்னணியிலும் முந்தி உயர்ந்து நிற்பது குலை வாழை தான். பந்தியில் கை நனைக்க வைப்பது தலை வாழை என வாழை நம் வாழ்வுடன் பிணைந்துள்ளதை நாம் உணர்ந்திருப்போம். வடக்கை விட, தென்னிந்தியாவில் உள்ள மக்கள் வாழை இலைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
விரதம், விஷேச நாட்களில் வாழை இலையில், சுடச்சுட சாதம் குழம்பு ஊற்றி பினைந்து சாப்பிடும் இன்பம் அலாதியானது. கல்யாண வீட்டு பந்தியில், வாழை இலையில் வகை வகையாக பரிமாறப்படும் உணவை உண்பதற்காவே பலரும் கல்யாணத்திற்கு செல்வார்கள். ஏன், 'இலை சாப்பாடு சாப்பிடணும் போல இருக்கு' என நாம் வாழ்வில் ஒருமுறையாவது நினைத்திருப்போம். அதன் படி, வாழை இலையில் உணவு எவ்வாறு பரிமாற வேண்டும்? அதில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பரிமாறுவது எப்படி?:
- இலையின் பெரிய பகுதி உண்பவரின் வலது புறமாக வரும்படி வைக்க வேண்டும். லேசாக நீர் தெளித்து வலது கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, அப்போது தான் உணவுடன் எளிதில் கலக்காது.
- வலது கையின் ஓரத்தில் இனிப்பு, பிறகு அதன் மேற்புறத்தில் தயிர் பச்சடி, முட்டைகோஸ் பொரியல்,காரப் பொரியல், தேங்காய் சேர்த்த பொரியல், கூட்டு அல்லது அவியல், பிரிஞ்சி, புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற வெரைட்டி ரைஸ்.
- இலையின் நடுவில் பருப்பு, இடது ஓரம் ஊறுகாய் அதன் மேல் பகுதியில் பழம், வடை, அப்பளம் வைத்து இலையின் மையப்பகுதியில் சோறு பரிமாற வேண்டும். சாதத்திற்கு பின் நெய், அதன்பின் சாம்பார், அதை முடித்ததும் வத்தக்குழம்பு, அதன் பிறகு ரசம் ஊற்றி சாப்பிட வேண்டும்.
- ரசம் சோறு சாப்பிட்ட பிறகு பாயாசம், இறுதியாக மோர் ஊற்றி சாப்பாடு.

ஏன் இவ்வாறு பரிமாற வேண்டும்?:
- முதலில் பரிமாறப்படும் இனிப்பு வகைகள், சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன் லைட்டாக டேஸ்ட் செய்ய வேண்டிய உணவுப்பொருட்கள். இதை சாப்பிடும் போது இரைப்பையில் ஜீரண ஹார்மோன் தூண்டப்பட்டு வாயும் வயிறும் சாப்பிடுவதற்கு தயாராகும்.
- பின்னர், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள காரப்பொரியல் மற்றும் தேங்காய் சேர்த்த பொரியல். வத்த குழம்புக்கு தேங்காய் சேர்த்த பொரியல், ரசம் சாதத்திற்கு அப்பளம், வடை. வெரைட்டி ரைஸிற்கு தொட்டுக்கொள்ள கூட்டு அல்லது அவியல். அதன் பிறகு உமிழ்நீர் சுரக்க வசதியாக பாயாசம். கடைசியாக மோர் சாதம்.
- இறுதியாக மோர் சாப்பிடுவதற்கு காரணம் உண்டு. மோர் சாதம் உணவுக்குழாயில் பயணிக்கும் போது அதற்கு முன்னால் சாப்பிட்ட உணவு பொருள் ஏதாவது உணவுக்குழாயில் தடைபட்டு நின்று இருந்தால அதையும் தன் கூட கூட்டிக்கொண்டு போய்விடும். அதனால் சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் வராது. சாப்பிட்டதை ஜீரணிக்கிற வேலையை வயிற்றுக்கு சுலபமாக்க கடைசியாக பழம்.
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- வாழை இலைகளில் அதிகளவு பாலிஃபீனால்கள் இருப்பதால், அவை கரிம ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் நிறைந்தவை.
- வாழை இலைகளில் வைக்கப்படும் சூடான உணவு பாலிஃபீனால்களை உறிஞ்சுகிறது. இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய பல நோய்களைத் தடுக்கும். இவை, செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகாளைக் கொண்டிருப்பதாகவும் உணவில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியதாக இருக்கிறது.
- தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும் தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் படுக்க வைப்பார்கள். அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும் மற்றும் புண்களை விரைவில் குணமாக்கும்.