போரைத் தடுக்குமா அமெரிக்க – ஈரானியப் பேச்சுக்கள்?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஈரானிய அணுசக்தித் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளன.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஈரானிய அணுசக்தித் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளன.
மத்திய கிழக்கு நாடான ஓமான் தலைநகர் மஸ்கட்டில் முதல் சுற்றுப் பேச்சுக்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்றுள்ளன. மூன்றாவது சுற்றுப் பேச்சுக்கள் ஓமானில் தொடரவுள்ளன.
இந்தப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு முன்னதாக இரண்டு தரப்பு நிபுணர்களும் கலந்து பேச உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஈரானிய அணுசக்தி விவகாரம் பல பத்தாண்டுகளாக உலகின் பேசுபொருளாக இருந்து வருவது தெரிந்ததே. சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே அணு உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருவதாக ஈரான் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்ற போதிலும் அதனை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அணுகுண்டுகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுவருவதாகக் குற்றம் சாட்டி வருகின்றது.
அத்துடன், ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. அதேவேளை, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக வலம்வரும் இஸ்ரேல், ஈரானின் அணு ஆய்வு மையங்களை இலக்கு வைத்து அவ்வப்போது விமான மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவையும் யெர்மனியும் இணைந்து ஈரானுடன் நடத்திய தொடர் பேச்சுக்களின் விளைவாக 2015ஆம் ஆண்டில் ஒரு பொது உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தின் ஓர் அங்கமான யுரேனியம் செறிவூட்டல் அளவைக் குறைத்துக் கொள்வது எனவும் பதிலுக்கு மேற்குலகம் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்திக் கொள்வது எனவும் இணக்கம் காணப்பட்டது.
எனினும் 2017ஆம் ஆண்டில் அமெரிக்க அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், 2018ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தந்தில் இருந்து தன்னிச்சையாக விலகிக் கொண்டார்.
ஒப்பந்தத்தை ஈரான் மதித்து நடக்கவில்லை எனவும், ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் செறிவூட்டலின் அளவை ஈரான் அதிகரித்து உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை ஈரான் அடியோடு மறுத்திருந்தது.
அது மாத்திரமன்றி, ஒப்பந்தத்தின் பிரகாரம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பன்னாட்டு அணு ஆராய்ச்சி நிறுவனமும் ட்ரம்பின் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியிருந்தது. அத்தோடு அமெரிக்காவின் நேச நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவையும் ஈரான் ஒப்பந்தத்தின் பிரகாரம் நடந்து கொள்வதாகத் தெரிவித்திருந்தன. எனினும், இந்தக் கருத்துக்களைப் புறந்தள்ளிய ட்ரம்ப், ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதுடன் ஈரான் மீதான பொருளாதார முற்றுகையையும் தீவிரப்படுத்தினார்.
தற்போது இரண்டாவது தடவையாகப் பதவியேற்றுள்ள ட்ரம்ப் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுக்களை மீள ஆரம்பித்துள்ளார்.
இரண்டு மாத காலத்தினுள் ஒரு உடன்படிக்கைக்கு ஈரான் இணங்காவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அத்துடன் நிலத்தடி இலக்குகளைத் தாக்கி அழிக்கக்கூடிய பி-2 வகை தாக்குதல் விமானப் படையணிகளையும் மத்திய கிழக்குப் பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இத்தகைய பின்னணியிலேயே தற்போதைய பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் நேரடிப் பேச்சுக்களை நடத்த அமெரிக்கா விரும்பிய போதிலும் ஈரான் அதற்குத் தயக்கம் காட்டி வருகின்றது. 2015 ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா வெளியேறிய நிலையில், மூன்றாவது தரப்பு ஒன்றின் ஊடாக பேச்சுக்களை நடத்த ஈரான் சம்மதித்துள்ளது. இந்நிலையில் ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது நடைபெறும் பேச்சுக்கள் வெளிப்படையாக நடைபெற்று வருகின்ற போதிலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் 2023 தொடக்கம் ஓமானில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஒருசில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவின் மத்திய கிழக்குக்கான தூதுவர் ஸ்டீவ் விட்கோவ் தலைமையிலான குழுவினரும் ஈரான் தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினரும் பங்கெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, முன்னைய பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்த நாடுகள் தற்போதைய பேச்சுக்களுக்காக அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்த கையோடு ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷ்யாவுக்குச் சென்று அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்து பேச்சுக்கள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வேளையில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா கொமெய்னியின் தனிப்பட்ட செய்தி அடங்கிய கடிதம் ஒன்றையும் புட்டினிடம் கையளித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2015 உடன்படிக்கையின் பிரகாரம், இந்த வருடம் அக்டோபர் மாதத்துக்கு இடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய ஒரு ஒப்பந்தம் உருவாகாது விட்டால் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.
தற்போதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி ஈரான் 60 சதவீதம் வரை யுரேனியத்தைச் செறிவூட்டி உள்ளதாகத் தெரிகின்றது. அணுகுண்டு தயாரிப்பதாயின் யுரேனியத்தின் செறிவு 90 சதவீதமாக இருக்க வேண்டும். அத்தகைய இலக்கை ஈரான் அடைந்துவிடாமல் தடுப்பதில் அமெரிக்காவை விடவும் இஸ்ரேல் அதிக முனைப்புக் காட்டி வருகிறது.
மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ஒரேயொரு நாடான இஸ்ரேல், ஏனைய நாடுகள் அந்தப் பிராந்தியத்தில் அணுவாயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடுத்து விடுவதில் கண்ணுங் கருத்துமாக உள்ளது. அணுவாயுதங்கள் மாத்திரமன்றி தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய இரசாயன ஆயுதங்கள், நீண்டதூர ஏவுகணைகள் உள்ளிட்ட சகலவிதமான ஆயுதங்களின் உற்பத்தியையும் தடுத்துவிடும் எண்ணத்துடன் இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக – அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் – பிராந்தியத்தில் உள்ள தனக்கு அச்சுறுத்தலான நாடுகள் அனைத்தின்மீதும் அவ்வப்போது தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது.
தற்போதைய பேச்சுக்கள் ஈரானின் அணுசக்தி விவகாரத்துக்குத் தீர்வைக் கொண்டு வருமா அல்லது அமெரிக்காவும் இஸ்ரேலும் பெரிதும் விரும்புவது போன்று ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்படுமா என்பதே பெறுமதியான கேள்வி.
தற்போதைய பேச்சுக்களில் என்னென்ன விடயங்கள் அடங்கியுள்ளன என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. பொதுவில் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாகவே பேச்சுக்கள் நடப்பதாகத் தெரிந்தாலும் நீண்டதூர ஏவுகணைகளைத் தயாரிப்பது தொடர்பிலும் அமெரிக்கத் தரப்பு பேச விரும்புவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை மேசையில் பலமுள்ள தரப்பாக அமெரிக்கா உள்ளபோதும் 2015ஆம் ஆண்டில் இருந்த அதே பலத்துடன் ஈரான் தற்போதும் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
பிராந்தியத்தில் ஈரானின் சகாக்களாகக் கருதப்பட்ட பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு என்பவை கடந்த ஒரு வருட காலத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்களால் பலமிழந்த நிலையில் உள்ளன.
மறுபுறம், ஈரானின் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சிரியாவின் அஸாத் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னடைவுகளைக் கொண்டுள்ள ஈரான், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணியுமா என்ற கேள்வி உலக அரங்கில் எழுப்பப்படுகின்றது.
ஈரானின் நட்பு நாடுகளாக வல்லரசுகளான சீனா மற்றும் ரஷ்யா உள்ளன. எண்ணெய் வளம் மிக்க ஈரான், பெருமளவு எண்ணெய்யை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. பொருளாதாரத் தடையில் இருந்து தப்பிக் கொள்வதற்காக இரு நாடுகளும் டொலரைத் தவிர்த்து தத்தம் நாணயங்களில் வர்த்தகம் செய்து வருகின்றன.
சீனாவுடனான வர்த்தகப் போட்டியில் உள்ள அமெரிக்காவை இந்த வர்த்தகம் விசனத்துக்கு உட்படுத்தி உள்ளது. தற்போது சீனாவுடனான வர்த்தகப் போட்டியை உக்கிரப்படுத்தியுள்ள ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இந்த இரு தரப்பு வர்த்தகம் அதிக சினத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தற்போதைய இரு தரப்புப் பேச்சுக்களில் இந்த வர்த்தகம் தொடர்பிலும் உரையாடப்பட வாய்ப்பு உள்ளது.
மறுபுறம், ரஷ்யாவுடனான பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை ஈரான் அண்மையில் செய்துள்ளது. உக்ரேனுடனான போரில் ஈரான் தயாரிப்பு ட்ரோன்கள் ரஷ்யாவினால்; அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் செய்து கொள்ளப்பட்டுள்ள இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை, பேச்சுவார்த்தை மேசையில் ஈரானின் கையை ஓங்கச் செய்யுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
சீனாவும் ரஷ்யாவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள நிலையில் ஐ.நா. மூலமாக அமெரிக்கா மேற்கொள்ளக் கூடிய காய்நகர்த்தல்களில் தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து ஈரானைக் காப்பாற்ற முனையலாம். ஆனால், ஆயுத மோதல் ஒன்று உருவாகும் பட்சத்தில் எத்தகைய நடவடிக்கைகளை அந்த நாடுகள் மேற்கொள்ளும் என்பதை எதிர்வு கூறுதல் கடினமே.
பேச்சுவார்த்தைகளில் உடன்படிக்கை எட்டப்படாதவிடத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொள்ளும் உத்தேச தாக்குதல்களுக்குப் பதிலாக ஈரான் ஆற்றப்போகும் எதிர்வினை மூன்றாம் உலகப் போருக்கான வாசலைத் திறந்துவிடும் என நிச்சயம் நம்பலாம்.
போர் இல்லாத உலகே பார் எங்கும் உள்ள சாமானிய மக்களின் கனவு. ஆனால், தொடரும் அரசியல் அதிகாரப் போட்டியில் சமானிய மக்களின் கனவு வெறும் பகல் கனவாகவே தொடர்கிறது என்பதே கசப்பான யதார்த்தம்.
சண் தவராஜா