தமிழ் திரையுலகம் சோகத்தில்! பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் மரணம்...
அவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களை விட நகைச்சுவை நடிகைகள் மிகவும் குறைவு. மனோரமா, கோவை சரளா என சில பேரே அந்த வகையில் அறியப்படுபவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் 1980,90களில் முக்கியமான நகைச்சுவை நடிகையாக அறியப்பட்டவர் பிந்து கோஷ்.
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த 76 வயதான பிந்து கோஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மார்ச்.16) உயிரிழந்துள்ளார். தமிழ் திரையுலகமே அதற்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. 1980களில் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவைக தாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பிந்து கோஷ்.
பிரபுவின் ‘கோழி கூவுது’ படத்தின் மூலம் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர். 1960ஆம் ஆண்டு கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டார். அந்த படத்தில் ஒரு பாடலுக்கு கமல்ஹாசனுடன் நடனமாடியுள்ளார் பிந்துகோஷ். நடிகையாக மட்டுமல்லாமல் நடனக்கலைஞராகவும் வலம் வந்தவர் பிந்துகோஷ்.
‘கோழி கூவுது’ படத்திற்கு பிறகு ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ உள்ளிட்ட பல படங்கள் நடித்துள்ளார்.தனித்துவமான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம், பிந்து கோஷ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஒரு அதிக ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். 1990களின் ஆரம்பத்திலேயே படம் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டவர். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல் பிரச்சினைகளால் கடும் சிரமப்பட்ட அவர் சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்து வந்தார். உடல்நிலை மோசமடைந்த நிலையில் தன் அன்றாட செலவுகளை கூட அவரால் சமாளிக்க முடியாத சூழல் உருவானது. பல்வேறு திரை பிரபலங்களிடமும் உதவி கேட்டிருந்த நிலையில் சில பேர் மட்டுமே உதவி செய்துள்ளனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து கூறியிருந்தார் பிந்துகோஷ்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிந்து கோஷ் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.16) அன்று உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச்.17) அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.