’ரெட்ரோ’ பாடலுக்கு நடனம் ஆடிய சந்தோஷ் நாரயணன்... வெளியானது சூர்யாவின் ’கனிமா’ பாடல்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் ’கனிமா’ பாடல்

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் கனிமா தற்போது வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா என எதிர்பாராத கூட்டணியில் உருவாகியுள்ள 'ரெட்ரோ’ படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரில் இருந்தே அதற்கான எதிர்பார்ப்பு எகிற தொடங்கி விட்டது.
இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான சந்தோஷ் நாரயணன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
வரும் மே 1ஆம் தேதி ’ரெட்ரோ’ (Retro) திரைப்படம் வெளியாகிறது. படத்தின் டீசர் பாடல்கள் என புரோமோஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து, டீசர், முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது கனிமா பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் பாடலாக இது உருவாகியுள்ளது. கனிமா பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியும் உள்ளார். இந்த பாடலின் ப்ரோமோவுக்கு சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கார்த்திக் சுப்பராஜை டேக் செய்துள்ள, சந்தோஷ் நாராயணன் அதற்கு, " கார்த்திக் சுப்புராஜ் சார் உங்களுக்கு இந்த நடனம் பிடிக்கும் என நினைக்கிறேன் சார். இந்த நடன வீடியோவை பாதுகாப்பு காரணங்களுக்காக யாரிடமும் பகிர வேண்டாம். எனது நடனம் எப்படி உள்ளது என கூறுங்கள் சார்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோவைப் பார்த்த சூர்யா, கனிமா பாடல் முழுவதும் நான் உங்களை மட்டும்தான் ஜூம் செய்து ஃபாலோ செய்தேன் என கமெண்ட் போட்டுள்ளார்.