ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்தின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மீளாய்வு செய்யவுள்ளார் பிரதமர் மோடி - இந்திய வெளிவிவகார அமைச்சு!
,

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்ட ஒத்துழைப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 4 - 6 வரை பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீமகா போதியில் மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதேவேளை இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். குறிப்பாக இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாத்திரமின்றி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 'பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான' கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளமை விசேட அம்சமாகும்.
பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக 2019ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்தியாவும் இலங்கையும் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளுடன் நாகரிக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அந்த வகையில் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகவும், மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் மேலும் உத்வேகத்தை அளிக்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தாய்லாந்து மற்றும் இலங்கை பயணம் மற்றும் 6ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்பது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை, 'கிழக்கு நோக்கி செயல்படுங்கள்' கொள்கை, 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தோ-பசுபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.