5 வாரங்களுக்குப் பிறகு முதல் முறை.. பொதுவெளியில் தோன்றும் போப் பிரான்சிஸ்! உடல் நிலை எப்படி இருக்கு?
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது 88.

போப் பிரான்சிஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை. தற்போது 5 வாரங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றி, மருத்துவமனை ஜன்னல் வழியாக ஆசிர்வதிக்க உள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 88). வயோதிகம் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் போப் பிரான்சிஸ் அவதியுற்று வருகிறார். சிறு வயதில் இருந்தே போப் பிரான்சிஸுக்கு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், நாள்பட்ட நுரையீரல் நோயால் பிரான்சிஸ் பாதிக்கப்பட்டார்.
போப் பிரான்சிஸ்கு தீவிர சிகிச்சை.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. எனினும், அவர் தொடர்ந்து மத பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அடுத்த சில நாட்களில் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து கடந்த 14-ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசத்துடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், போப் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடல் நலம் தேறியதையடுத்து, கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படத்தை வாட்டிகன் வெளியிட்டது. போப் பிரான்சிஸ் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக புகைப்படம் அன்றைய தினம் வெளியானது.
5 வாரங்கள் கழித்து பொதுவெளியில்.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு 5 வாரங்கள் கழித்து முதல் முறையாக பொதுவெளியில் போப் பிரான்சிஸ் தோன்றுகிறார். ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தபடியே ஜன்னல் வழியாக ஆசிர்வதிக்க உள்ளார். போப் ப்ரான்சிஸ் வழக்கமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்தபடி வாராந்திர பிரார்த்தனையில் ஈடுபடுவார். ஆனால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்ட பிறகு கடந்த மாதம் 9 ஆம் தேதிக்கு பிறகு அவர் பொதுவெளியில் பிரார்த்தனையில் ஈடுபடவில்லை. இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றி ஆசிர்வதிக்க உள்ளார். வழக்கமான பிரார்த்தனையில் ஈடுபட மாட்டார் எனவும், அதற்கு பதிலாக நண்பகல் அளவில் மருத்துவமனையில் ஜன்னல் வழியாக பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பொறுப்பேற்ற பிறகு நீண்ட நாட்கள் பொதுவெளியில் அவர் தோன்றாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது போப் பிரான்சிஸ்க்கு உடல் நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், தனது பேசும் திறனை முழுமையாக பெற இன்னும் கூடுதல் கால அவகாசம் எடுக்கும் என்றும் வாடிகன் தலைமை அதிகாரி கார்டினல் விக்டர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். அதேபோல அவர் மருத்துவமனையில் இருந்து எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. பிரிட்டன் மன்னர் சார்லஸை வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சந்திக்க போப் பிரான்சிஸ் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு முன்பாக அவர் வாடிக்கனுக்கு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.