ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் குறித்து வௌியான அறிக்கை
வியட்நாம் வர்த்தக மேம்படுத்தல் நிறுவனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டு, முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திடுவார் என்றும், வர்த்தக சமூகத்துடன் இணைந்துக் கொள்ள ஜனாதிபதி எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அதில் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிலையில், வியட்நாம் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாம் விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் செல்லவுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற குறித்த ஒப்பந்தங்கள் பின்வருமாறு…
இலங்கையின் பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் வியட்நாமின் இராஜதந்திர சர்வதேச விஞ்ஞான நிறு வகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிக்கலான சமகால உலகில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ள இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான புதிய கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், பொதுவாக ஆர்வங்காட்டுகின்ற துறைகளில் பரஸ்பரமாக நன்மையளிக்கின்ற ஒத்துழைப்புக்களைப் பேணிச் செல்வதற்காக நிறுவன ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் இயங்குகின்ற பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் வியட்நாமின் இராஜதந்திர சர்வதேச விஞ்ஞான நிறுவகத்திற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அத ன்மூலம், விசேட நிபுணத்துவ அறிவுப் பரிமாற்றம், இராஜதந்திரிகள், கல்வியியலாளர்கள், அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பரிமாற்றம் செய்து கொள்வதுடன், கற்கைகள் மற்றும் ஆய்வு நிகழ்ச்சித்திட்டங்கள், பல்வேறு பாடநெறிகள், மாநாடுகள் இராஜதந்திர துறைசார் ஏனைய கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுக்குரிய விசேட நிபுணத்துவங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கா ன வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு ம் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, மூன்று (03) ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச் சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வியட்நாம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான இயந்திர உப கரணங்கள் தயாரிப்புக்கான ஒத்துழை ப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்,
இரு நாடுகளுக்கிடையில் மின் உபகரணங்கள் மற்றும் பிற உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட இயந்திர உபகரணங்கள் மற்றும் இத்துறையின் இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்காக முன்பிருந்த கைத்தொழில் விடயதான அமைச்சு மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2011 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்டுள்ளது.
2019 ஆண்டில் இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான உபகுழுவின் இரண்டாவது கூட்டத்தில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதிப்பிப்பதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, முன்னேற்றகரமான தொழிநுட்பங்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் மற்றும் உள்நாட்டுப் பங்காளர்களுக்கான பயிற்சி மற்றும் இயலளவு விருத்தியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்கி, திருத்தங்களை உட்சேர்த்து இற்றைப் படுத்தப்பட்ட இயந்திரோபகரணங்கள் தயாரிப்புக்கான ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வியட்நாம் வர்த்தக மேம்படுத்தல் நிறுவனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுதல்.
இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்காக வியட்நாம் வர்த்தக மேம்படுத்தல் நிறுவனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் இருதரப்பினருடனும் தொடர்புடைய வர்த்தகம் தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தை மதிநுட்பத்தை பரிமாறுதல், இரண்டு நாடுகளிலும் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சிகள், கண்காட்சிகள் மற்றும் ஊக்குவிப்புச் செயற்பாடுகளில் ஒ ருங்கிணைந்த பங்கேற்பு மற்றும் வர்த்தக முகவர் குழுக்களின் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பரந்தளவிலான வர்த்தக பிரச்சார செயற்பாடுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேற்குறிப்பிட்ட ஒத்துழைப்பு மூலம் குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவு, மீன்பிடி செயற்பாடுகள், ஆடை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாயத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு சந்தை வாய்ப்புக்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் வரைபுக்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வியட்நாம் வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
விவசாய துறையின் ஒத்துழைப்புக்கான இலங்கை விவசாய திணைக்களம் மற்றும் வியட்நாம் விவசாய விஞ்ஞான கலாசாலை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுதல். விவசாய ஒத்துழைப்பை குறிக்கோளாக கொண்டு 2006 ஆண்டில் இலங்கை மற்றும் வியட்நாம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
அதற்கமைய, இருதரப்பினரின் சம்மதத்துடன் 2010 - 2011, 2017 - 2019, 2022 - 2024 மற்றும் 2024 - 2026 ஆண்டுகளுக்கான செயற்பாட்டுத் திட்டம் கையெழுத்திடப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
2024 - 2026 செயற்பாட்டு திட்டத்தின் ஒரு அங்கமாக இருநாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை விருத்தி செய்வதற்கான இயலுமை உள்ளது. அதற்கமைய, இலங்கை விவசாய திணைக்களம் மற்றும் வியட்நாம் விவசாய விஞ்ஞான கலாசாலை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு உட ன்படிக்கையின் வரைபுக்கு வெளிவிவகார அமைச்சின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, மேற்குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.