கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின் எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும்

இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும்.
வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின் எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம் மகாதேவா , ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர் வெவ்வேறு காலப்பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய ஜனநாயக தலைவர்களாக விளங்கினர். தமிழ் ஆயுதப் போராளிகளின் எழுச்சி மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ தோற்றப்பாடு இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நிகழ்வுப் போக்குகளாகும்.
மேற்குறிப்பிட்ட அளவுகோலின்படி உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு தொடக்கி 2024 ஆம் ஆண்டுவரை இராஜவரோதயம் சம்பந்தனின் தலைமைத்துவக் காலப்பகுதி என்று கருதப்படுகிறது.
இறுதி ஒரு சில வருடங்களில் அவரின் பிடி தளர்ந்துவிட்ட போதிலும், சம்பந்தன் உயர்த்தியிலும் அடையாள அடிப்படையிலும் கேள்விக்கு இடமின்றிய இலங்கை தமிழ் தலைவராக விளங்கினார். அவரது வாழ்வின் அந்திமக் காலத்தில் சம்பந்தன் " பெருந்தலைவர் " என்று அழைக்கப்பட்டார்.
கடந்த வருடம் சம்பந்தனின் மறைவுக்கு பிறகு தமிழ்த் தேசியவாத அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் மிகவும் முனைப்பாக தெரிந்தது.
மதுபான அனுமதிப் பத்திர சர்ச்சைக்கு பிறகு கடந்த வருடம் சி.வி. விக்னேஸ்வரனின் அரசியல் ஓய்வு மற்றும் இவ்வருட தொடக்கத்தில் சோமசுந்தரம் மாவை சேனாதிராஜாவின் மறைவு ஆகிய காரணிகள் தலைமைத்துவ வெற்றிடம் மேலும் விரிவடைவதற்கு பங்களிப்புச் செய்தன.
இத்தகைய சூழ்நிலையில், தமிழ்த் தேசியவாத தலைமைத்துவ "சிம்மாசனத்துக்கு ஆர்வப்படும் ஒருவரை மேம்படுத்துவதற்கு தன்னல அக்கறைச் சக்திகளும் கட்சிகளும் ஒன்றுபட்டுத் திட்டமிட்டு தீவிர முயற்சிகளை முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
அது வேறு எவருமல்ல, சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமேயாவார். கஜன் என்று பொதுவாக அறியப்படும் அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராகவும் இருக்கிறார்.
முதலில் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 2020 ஆம் ஆண்டில் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாக தற்போதும் தொடருகிறார்.
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கஜேந்திரகுமார் இலங்கை தமிழரசு கட்சியுடனும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் செயற்பாட்டு உறவுமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சி எடுத்தார்.
தமிழரசு கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரனுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தையும் அவர் சந்தித்தார்.
ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிதிரண்டு புதிய அரசியலமைப்பு யோசனைகளை முன்வைக்க வேண்டியது அவசியம் என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் எடுத்தார்.
அவரின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. வழமை போன்று அவர் அதற்கு தனது அரசியல் எதிரியான தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ . சுமந்திரனையே குற்றம் சாட்டினார்.
ஐக்கியப்பட்டு செயற்படுவதை நோக்கிய ஒரு நகர்வாக தனது முயற்சிகளை கஜேந்திரகுமார் காண்பித்தார் என்ற போதிலும், அதற்குள் இருக்கக்கூடிய அந்தரங்க அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை கூர்மதியுடைய அரசியல் அவதானிகளினால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது.
தனது தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டணி ஒன்றை உருவாக்குவதன் மூலம் கஜேந்திரகுமார் நடைமுறையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் என்ற அந்தஸ்தை அடைவதில் கண்வைத்தார். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக இரா. சம்பந்தன் அவர்களே இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிப்படையான முயற்சி.
உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அதியுயர் தமிழ் அரசியல் தலைவராக வருவதற்கான முயற்சி மிகவும் வெளிப்படையானதாக தெரிய வந்திருக்கிறது.
கஜேந்திரகுமாரை இலங்கை தமிழர்களின் எதிர்காலத் தலைவராக காட்சிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான முயற்சிகள் அரசியல் அவதானிகளை குழப்பத்துக்குள்ளாக்கியிருப்பது மாத்திரமல்ல, அவர்கள் அதை வேடிக்கையாகவும் நோக்குகிறார்கள்.
அரசியல் கூட்டங்களில் கஜேந்திரகுமாரின் புகழ்பாடப்படுகிறது. பல மூத்த தமிழ் அரசியல்வாதிகள் கஜேந்திரகுமாரின் அரசியல் உறுதிப்பாட்டுக்காக அவரை பாராட்டுவதுடன் அவரே அதியுயர் தமிழ்த் தலைவர் என்றும் அறிவிக்கிறார்கள்.
சுமார் அறுபது வருடங்களாக அரசியலில் இருந்து வரும் மூத்த சட்டத்தரணி ஒருவர் கஜேந்திரகுமாரின் தலைமையில் தமிழர்களின் எதிர்காலம் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அரசியலில் இருந்து மகிழ்ச்சியுடன் ஓய்வுபெறலாம் என்று அண்மையில் கூறியிருந்தார்.
அதனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு அதியுயர் தமிழ்த் தலைவராக கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்தும் நோக்கில் மிகவும் வலுவான முறையில் குரலெழுப்பப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.
கஜனின் விசுவாசிகளில் சிலர் அவரை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறகு " தமிழ்த் தேசியத் தலைவர் " என்று வர்ணிக்கத் தொடங்கினார்கள். கண்டனக் குரல்கள் கிளம்பியதன் விளைவாக அந்த முயற்சி பிசுபிசுத்துப் போனது.
ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு தமிழ்த் தேசியவாதத்தின் தலைவராக கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது பெரிதும் சாத்தியம்.
அதனால், இத்தகைய பின்புலத்தில், இந்த கட்டுரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதும் தமிழ்த் தலைமைத்துவத்துக்கான அவரின் வாய்ப்புக்கள் மீதும் கவனம் செலுத்துகிறது. எனது முன்னைய எழுத்துக்கள் சிலவற்றின் உதவியுடன் கஜனின் அரசியல் பின்னணியை சுருக்கமாக விளக்க முனைகிறேன்.
தமிழ் அரசியல் வம்சம்.
தமிழ் அரசியல் அரங்கில் " வம்ச மரபுக்கு " கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரகாசமான ஒரு உதாரணமாகும். அவர் அரசியலில் பொன்னம்பலங்களின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.( சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆகியோருடன் இந்த பொன்னம்பலங்களை குழம்பிக்கொள்ளத் தேவையில்லை)
ஜீ.ஜீ பொன்னம்பலம்.
கஜேந்திரகுமாரின் தந்தைவழிப் பாட்டனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் என்று அறியப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தாபக தலைவரான கணபதி காங்கேசர் பொன்னம்பலம் ஆவார்.
அவர் தனது காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய சில வழக்குகளில் தனித்துவமான திறமையுடன் ஆஜரான சிறப்புவாய்ந்த ஒரு வழக்கறிஞராவார்.
ஜீ ஜீ. பொன்னம்பலம் பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் சுதந்திரத்துக்கு பின்னருமாக சுமார் இரு தசாப்த காலமாக இலங்கைத் தமிழர்களின் முடிசூடா அரசியல் தலைவராக விளங்கியவர்.
1934 ஆம் ஆண்டு தொடக்கம் 1947 ஆம் ஆண்டு வரை அரசாங்க சபையில் ( State Council ) பருத்தித்துறை தொகுதியை பிரதிநிதித்துவம் செய்த பொன்னம்பலம் முதலில் 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 ஆம் ஆண்டு வரையும் பிறகு 1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரையும் யாழ்ப்பாணத் தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார்.
பிரதமர்கள் டி.எஸ். சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களில் (1947 - 1953 ) பொன்னம்பலம் கைத்தொழில் , கைத்தொழில் ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
"ஐம்பதுக்கு ஐம்பது " என்று பிரபலமாகச் சொல்லப்படுகின்ற சமநிலையான பிரதிநிதித்துவ அரசியல் கோரிக்கையை முன்வைத்ததால் ஜீ.ஜீ. மிகவும் பிரபல்யமானார்.
சமநிலையான பாராளுமன்றத்தில் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருக்கு 50 சதவீத ஆசனங்களும் சகல சிறுபான்மைச் சமூகங்களுக்கும் 50 சதவீதமான ஆசனங்களும் இருக்க வேண்டும் என்று ஜீ.ஜீ. விரும்பினார்.
குமார் பொன்னம்பலம்.
ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் மகன் காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம் அல்லது ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஜூனியர். ஆனால், அவர் குமார் பொன்னம்பலம் என்றே பிரபல்யமாக அழைக்கப்பட்டார்.
அவரே கஜேந்திரகுமாரின் தந்தையார். ஒரு முன்னணி சட்டத்தரணியான குமார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட பல தமிழ் இளைஞர்களின் வழக்குகளில் அவர்களுக்காக இலவசமாக வாதாடினார்.
அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட குமார் தந்தையின் மறைவுக்கு பிறகு தமிழ் காங்கிரஸுக்கு தலைமை தாங்கினார். அரசியலில் பிரபலமானவராக இருந்தபோதிலும், குமார் தனது வாழ்நாளில் ஒருபோதுமே அரசியல் பதவி எதற்கும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.
1977 ஜூலை பொததுத்தேர்தலில் ( பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையின் கீழ் ) யாழ்ப்பாணம் தொகுதியில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டு தோல்வி கண்டார். 1989 பெப்ரவரி பொதுத்தேர்தலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் குமாரின் தலைமையில் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மீண்டும் தோல்வியடைந்தனர்.
1994 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சகலரையும் தமிழராகக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்கள் பட்டியலுக்கு குமார் தலைமை தாங்கினார்.
ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இலங்கையின் முதல் ஜனாதிபதி தேர்தல் 1982 அக்டோபரில் நடைபெற்றது. அதில் போட்டியிட்டதை அடுத்து குமார் தேசிய ரீதியில் பிரபல்யமானார். ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்த ஜனாதிபதி தேர்தலில் 173, 000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று குமார் நான்காவதாக வந்தார்.
பின்னர் குமார் பொன்னம்பலம் விடுதலை புலிகள் இயக்கத்தை வெளிப்படையாகப் புகழத் தொடங்கினார். கொழும்பில் வாழ்ந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆத்திரமூட்டக்கூடிய வகையில் விடுதலை புலிகளுக்கு ஆதரவான அறிக்கைகளை அவர் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
குமார் கொழும்பில் 2000 ஜனவரி 5 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கி ரவைகள் துளைத்த அவரின் உடல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் வாகனத்திற்குள் கிடக்கக்காணப்பட்டது.
அவரது கொலைக்கு ஒரு சில தினங்கள் முன்னதாக குமார் பொன்னம்பலம் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியிருந்தார்.
" ஒரு தமிழ் ஈழவன் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். விடுதலை புலிகளின் அரசியல் கோட்பாட்டின் கலப்பற்ற, பச்சாதாபப்படாத ஒரு ஆதரவாளனாவும் அந்த நம்பிக்கையுடன் தென்னிலங்கையில் வாழ்கின்ற ஒருவனாகவும் இதை எழுதுகிறேன்.
இந்த நிலைப்பாட்டை இலங்கையில் மாத்திரமல்ல அதற்கு வெளியிலும் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துகின்ற ஒருவனாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்" என்றே அவர் கடிதத்தை தொடங்கினார். விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குமாரின் மறைவுக்கு பிறகு " மாமனிதர் " என்ற கௌரவத்தை வழங்கினார்.
ஜீ.ஜீ.யின் பேரன், குமாரின் மகன்.
ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரனும் குமார் பொன்னம்பலத்தின் மகனுமான கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம் 1974 ஜனவரி 16 ஆம் திகதி பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியையும் இரண்டாம் நிலைக் கல்வியையும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கொழும்பு சர்வதேச பாடசாலையிலும் பெற்றுக்கொண்ட கஜேந்திரகுமார் மூன்றாம் நிலைக் கல்விக்காக லண்டன் சென்றார்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மற்றும் ஆபிரிக்க கற்கைகளுக்கான பாடசாலையில் சட்டத்தைப் படித்த அவர் சட்டமாணி (எல்.எல்.பி.) பெற்றார். பிறகு லிங்கன்ஸ் இன்னில் ஒரு பாரிஸ்டராக சேர்ந்து கொண்டார்.
கஜேந்திரகுமார் 1997 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு அவர் இலங்கையில் ஒரு சட்டத்தரணியாக தகுதி பெறுவதற்காக கொழும்பில் சட்டக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டில் இலங்கையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார்.
தனது தந்தையாரின் மறைவுக்கு பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிர அரசியலில் பிரவேசித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி. ஆர்.எல்.எவ்.) ஆகிய நான்கு தமிழ்க் கட்சிகள் 2001 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைந்தன.
கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.2004 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஒரு கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் விருப்பத்துக்குரியவராக கருதப்பட்ட கஜேந்திரகுமாருக்கு கூட்டயைப்புக்குள் பிரகாசமான அரசியல் எதிர்காலம் ஒன்று இருக்கும் என்ற பலரும் எதிர்வு கூறினர். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.
கஜேந்திரனும் பத்மினியும்.
சுயாதீனமானதாக தோற்றம் பெற்றிருந்த போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிறகு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 2004 பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பட்டியலை பூர்த்தசெய்த விடுதலை புலிகள் தேர்தலில் முறைகேடுகளையும் செய்தனர்.
இரு தேசியப்பட்டியல் ஆசனங்கள் உட்பட கூட்டமைப்பு 24 ஆசனங்களை வென்றெடுத்தது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் விடுதலை புலிகளின் உயர் தலைமைத்துவத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர். கஜேந்திரனும் பத்மினி சிதம்பரநாதனுமே அவர்கள்.
அவர்கள் இருவருக்கும் மிகவும் நெருக்கமானவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரை, செல்வராஜா கஜேந்திரன் முதலாவதாகவும் ( 112, 077 ) பத்மினி இரண்டாவதாகவும் ( 68,240) கஜேந்திரகுமார் மூன்றாவதாகவும் (60, 770) வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
ஆனால், 2009 மே மாதத்துக்கு பிறகு நிலைவரங்கள் மாறின. 2010 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நிலைவரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஏற்கெனவே விடுதலை புலிகளின் தலைமைத்துவத்துக்கு நெருக்கமானவர்களாக கஜேந்திரனும் பத்மினியும் இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை எதிர்த்து நிற்கவும் மலினப்படுத்தவும் அவர்களினால் " செல்வாக்கை" பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.
பரமசிவன் கழுத்து நாகபாம்பு கருடனைப் பார்த்து நலமா என்று கேட்பதைப் போன்று அவர்கள் இருவரும் விடுதலை புலிகளிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை அவமதித்தனர்.யாழ்ப்பாணத்தில் பல கல்விமான்களையும் துறைசார் நிபுணர்களையும் கூட அவர்கள் இருவரும் அலட்சியம் செய்தனர்.
கஜேந்திரனும் பத்மினியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியலிலும் ஈடுபட்டிருந்தனர். விடுதலை புலிகளுக்கு சார்பாக பட்டதாரி மாணவர்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தொடர்ச்சியான " "பொங்குதமிழ்" நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதிலும் அவர்கள் முன்னணியில் செயற்பட்டனர்.
பாலஸ்தீனத்தின் " இன்ரிபாடா " போராட்டத்தின் வழியில் மாணவர்களை வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் மாணவர்களை தூண்டினர்.
ஆனால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ப்துகாப்பு செயலாளராகவும் வந்த பிறகு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.
யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவான சக்திகளுக்கும் எதிராக வழமையான மார்க்கங்களிலும் வழமைக்கு மாறான வழிமுறைகளிலும் அரசாங்கம் பெருமளவில் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது.
விடுதலை புலிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளினால் பல்கலைக்கழக மாணவர்களில் சில பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பக்கபலமாக செயற்பட கஜேந்திரனும் பத்மினியும் அங்கே நிற்கவில்லை. அவர்கள் இருவரும் முதலில் வன்னியிலும் பிறகு வெளிநாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
2010 தேர்தல் .
ஆனால், 2010 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கஜேந்திரனும் பத்மினியும் நாடு திரும்பி மீண்டும் போட்டியிடுவதற்கு தயாராகினர்.
ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் இவர்களுக்கு இடம்கொடுக்க தயாராக இருக்கவில்லை. மேலும், யாழ்ப்பாண மாணவர்களில் கணிசமான பிரிவினர் இவர்கள் இருவரையும் வேட்பாளர்களாக நியமனம் செய்வதை வரவேற்கப்போவதில்லை என்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அமைதியான முறையில் தெரியப்படுத்தினர். அதற்கு பிறகு நடந்தவற்றை எதிர்வரும் கட்டுரையில் பார்ப்போம்.
டி.பி.எஸ். ஜெயராஜ்