இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும்! - இரா.சாணக்கியன்.
2024ஆம் ஆண்டு வரையில் இந்த மண்ணில் தேசிய மக்கள் சக்தி என்ற ஒன்று இருக்கவில்லை. இன்னும் ஒரு வருடத்துக்குள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கதை முடியும்.

இந்த தேர்தலை யாரும் ஒரு வட்டாரத்துக்கான தேர்தலாக பார்க்கக்கூடாது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் - தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் மண்முனை தென் எருவில் பற்று சபைக்கு உட்பட்ட 10ஆம் வட்டார வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று சபைக்கு உட்பட்ட 10ஆம் வட்டாரமான பெரியகல்லாறு வட்டார வேட்பாளர் சி.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.
இதன்போது உரையாற்றிய சாணக்கியன்,
2024ஆம் ஆண்டு வரையில் இந்த மண்ணில் தேசிய மக்கள் சக்தி என்ற ஒன்று இருக்கவில்லை. இன்னும் ஒரு வருடத்துக்குள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கதை முடியும். நாட்டின் பொருளாதார நிலைமை அவ்வளவு மோசமாக சென்றுகொண்டிருக்கிறது.
நாட்டில் உள்ள ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் இந்த நாட்டில் அவர்களுக்கு வேறு வேலை இல்லாதது போன்று வடக்கு கிழக்கிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்குவீர்களா என்று கேட்டால் அவர்களிடமிருந்து பதில் வராது. அந்த வேளையில் எங்களை வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் போன்று பார்ப்பார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு தேசிய மக்கள் சக்தியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்குவதில்லை.
பிமல் ரத்நாயக்கவின் செல்லப்பிள்ளைகளுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்படும். தமிழர்களின் பிரச்சினையை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் உள்ள ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராலேயே பேசமுடியாது என்றால் எவ்வாறு ஒரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினரால் முடியும். தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினரால் மட்டுமே அதற்கு முடியும் என தெரிவித்தார்.