உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 9 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்!
நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்!

இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..
இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
திகாமடுல்ல – 12%
நுவரெலியா – 20%
யாழ்ப்பாணம் – 6%
வவுனியா – 31.5%
மன்னார் – 12%
அம்பாறை – 12.5%
அநுராதபுரம் – 10% – 15%
மொனராகலை – 15%
பதுளை – 20%
யாழில். 17 சபைகளுக்குமான வாக்களிப்பு ஆரம்பம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர். மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்!
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளரான முருகேசு அமிர்தமந்திரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர். தாக்குதலுக்கு இலக்கானவர், தலையில் காயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்