வன்முறையைத் தூண்டும் பிறந்த நாள் கொண்டாட்ட காணொளி பதிவேற்றம் - வீடு சுற்றிவளைப்பு!
இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை
இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.
அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான வன்முறைக்குத் தூண்டும்முறையில் காவாலிகளை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் போதைப்பொருள் விற்கும் நபர் ஒருவரின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் உரிய நபர் இல்லாத நிலையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் தங்கியிருந்த இருவரை கைது செய்துள்ள பொலிஸார் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் பிறந்த தினத்தினை முன்னிட்டு , பெருமளவான இளைஞர்களை ஒன்று கூட்டி பெருமெடுப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை தொடர்பிலான காணொளிகள் ரிக் ரொக்க உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த நிலையில் ,சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் , சட்ட விரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டியமை , வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்டமை , சட்டவிரோத சொத்துக்குவிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபரின் வீட்டில் சோதனை நடாத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதி கோரி இருந்தனர்.
பொலிசாரின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்று அனுமதி வழங்கியதை அடுத்து , இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை குறித்த நபரின் வீட்டினை பொலிஸ் அதிரடி படையினரின் ஒத்துழைப்புடன் , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு , வீட்டில் தேடுதல் நடாத்தினர்.
வீட்டில் பொலிஸார் தேடுதல் நடாத்திய வேளை குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில் , வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களையும் பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
அதேவேளை , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


