ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மோதல்களால் எரிவாயு, எண்ணெய் உற்பத்தி மையங்கள் இலக்கு!
இந்தத் தொடர் தாக்குதல்களால் பிரான்சின் 'டோட்டல்' (Total), பிரித்தானியாவின் 'ஷெல்' (Shell) உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களையும் பாதிக்கும் சூழல்
2026 மார்ச் மாதத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைகுலையச் செய்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல்களால், உலகின் மிக முக்கியமான எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான செய்தித்தொகுப்பு:
மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர் மேகங்கள், உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியத் தளங்களைச் சிதைத்து வருகின்றன. எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தாக்குதல்கள், உலகப் பொருளாதாரத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
கத்தாரின் ராஸ் லாஃபான் (Ras Laffan) தளம் சிதைவு
உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான கத்தாரின் ராஸ் லாஃபான் தளம், ஈரானின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் "கடுமையான சேதத்தை" சந்தித்துள்ளது. இன்று அதிகாலை நடந்த தாக்குதலில் அங்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
ஈரானின் சவுத் பார்ஸ் (South Pars) மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் 70 சதவீத இயற்கை எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யும் சவுத் பார்ஸ் கடல்சார் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாகவே கத்தார் மீதான தாக்குதலை ஈரான் நடத்தியதாகக் கருதப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலின் தாக்குதல் குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறினார். இருப்பினும், கத்தார் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், ஈரானின் ஒட்டுமொத்த சவுத் பார்ஸ் எரிவாயு வயலையும் தரைமட்டமாக்கிவிடுவோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தொடர்ந்து முடக்கினால், இந்தத் தீவின் உட்கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. தற்போதைக்கு உயிரிழப்புகள் ஏதுமின்றி ஏற்றுமதி தொடர்வதாக ஈரான் தரப்பு கூறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம்: உலகின் நான்காவது மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ருவைஸ் (Ruwais) அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியா: சவுதியின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ரஸ் தனுரா (Ras Tanura) மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட தீ விபத்தால் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டாலும், தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொடர் தாக்குதல்களால் பிரான்சின் 'டோட்டல்' (Total), பிரித்தானியாவின் 'ஷெல்' (Shell) உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. போரின் தீவிரம் குறையாத பட்சத்தில், உலகளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை வரலாறு காணாத உயர்வைக் காணலாம்.
சிவா சின்னப்பொடி


