வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு யாழ்.திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது!
வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக 'வடக்கு முதலீட்டு மாநாடு – 2026' (Northern Investment Summit - NIS26), ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு 2026 (Northern Investment Summit - NIS26) இன்று (21) புதன்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு மிகப் பிரமாண்டமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
வடக்கு மாகாணத்திலுள்ள முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், "Empowering Growth, Insightful Innovations" என்ற கருப்பொருளின் கீழ், இந்த மாநாடு இன்றைய தினம் ஆரம்பம்மாகி நாளை (22) வியாழக்கிழமையுமாக இரு தினங்கள் இடம்பெறவுள்ளது.
இன்றைய நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, ஆகியோர் பங்குபற்றினார்கள்.
குறித்த மாநாட்டினை இலங்கை முகாமைத்துவக் கழகம் (The Management Club - TMC) வட மாகாணத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பொருளாதார ஆற்றல்களை அடையாளம் கண்டு, நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட முதலீட்டு மேடையை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் போது விருந்தினர்கள் மங்கல வாத்தியங்களுடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றப்பட்டது. வரவேற்பு நடனத்தினை யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீட மாணவர்கள் ஆற்றுகை செய்தனர்.
தொடர்ந்து வரவேற்புரையை இலங்கை முகாமைத்துவக் கழகத்தின்(TMC) தலைவர் ரோஜர் தலயரத்னவும், உச்சிமாநாட்டின் நோக்கம் மற்றும் அறிமுக உரையை மாநாட்டின் செயற்றிட்டத் தலைவர் இந்திக கௌசால் ராஜபக்சவும் நிகழ்த்தினார்கள்.
வட மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான குழு விவாதத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் யாழ் மாவட்டத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக 'வடக்கு முதலீட்டு மாநாடு – 2026' (Northern Investment Summit - NIS26), ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


