தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல – ஐக்கிய மக்கள் சக்தி
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மறைக்கப்பட்ட நெருக்கடியொன்று உருவாகியுள்ளது.
உலகில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல. இது இலங்கையில் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எதிர்மறையான ஒரு போக்கினையே காண்பிக்கிறது. எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு இதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மறைக்கப்பட்ட நெருக்கடியொன்று உருவாகியுள்ளது. பொருளாதார நிபுணர்கள், நாட்டிலுள்ள முதலீட்டாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தாவிட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன. எமக்கு கற்பனை உலகில் வாழ முடியாது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காததால் நாடு பாரிய நெருக்கடிகளை ஏற்பட்டு, இறுதியில் ஆட்சியும் கவிழ்ந்தது. இவ்வாண்டின் 5 ஆண்டு ஆட்சி காலத்திலேயே மீண்டும் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த வேண்டிய காலம் ஆரம்பமாகிறது. வருடத்துக்கு சுமார் 5 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் நாட்;டில் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி இருப்பு 6 – 7 பில்லியன் டொலர் மாத்திரமே. வெளிநாட்டு கடன் மீள் செலுத்தலுடன் ஏனைய செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு நாட்;டின் அந்நிய செலாவணி இருப்பு ஆகக் குறைந்தது 12 பில்லியன் டொலராவது காணப்பட வேண்டும்.
ஆனால் பொருளாதார வளர்ச்சி வேகம் அதற்கு ஏற்றதாக இல்லை. எனவே அரசாங்கம் இதற்கு அரசியல் ரீதியான பதிலை வழங்காமல் பொருளாதார ரீதியிலான தீர்வினை முன்வைக்க வேண்டும்.
உலகில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல. இது இலங்கையில் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எதிர்மறையான ஒரு போக்கினையே காண்பிக்கிறது.
எனவே இந்த வங்கி நாட்டில் அதன் செயற்பாடுகளை நிறுத்துவரத தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.


