தமிழினத் துரோகியின் வாக்கு மூலமும், இனப் படுகொலையாளியின் ஈனச் செயலும்!
ஈஸ்டர் தாக்குதலின் Mastermind சுரேஷ் சாலே, யாழ்ப்பாணத்தில் அருண் சித்தார்த் தலைமையில் ஆவா குழு, கிரீஸ் மனிதன் உட்பட்ட பல கொடூரங்களை செய்வித்தவர்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று திரு மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதற்கு 3 நாட்களுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே எங்களை ஹபரணவுக்கு வரச் சொன்னார். மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்கள் என்னிடமும் பிள்ளையானிடமும் அரசாங்கம் மாறி விட்டது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்.
ஆயுதங்களை ஒளியுங்கள். தன்னையும் இடம் மாற்றலாம். இராணுவ சம்பளம் சில வேளை தொகையாகக் கொடுக்க விட மாட்டார்கள். ஆட்களுக்கு நேரடியாகத் தான் கொடுக்க வேண்டி வரும் என பல விடயங்களை சொன்னார்.
எதற்கும் 15 போலி பெயர்களை எழுதித் தருங்கள். அந்த பெயர்களை இராணுவ சம்பள பட்டியலில் சேர்த்து விடுகிறேன் என நம்பிக்கை தந்தார். போலி பெயர்களை எங்களுக்கு பொறுப்பான புலனாய்வு அதிகாரி மொகமட்டுக்கு அனுப்பி வைத்தேன். எங்களுக்கு ரூபா 3.5 மில்லியன் மாத இராணுவ சம்பளம் தொடர்ச்சியாக மாதாந்தம் வழங்கப்பட்டு வந்தது.
2015 பொதுத்தேர்தலிற்கு பின்னர் பிள்ளையானை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். 5 மாத காலம் 4 ஆம் மாடியில் தடுத்து வைத்திருந்தார்கள். நான் பிள்ளையானை ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமதி பெற்று சந்தித்தேன்.5 மாதங்களுக்குப் பிறகு பிள்ளையானை மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றினர்.
பிள்ளையானுக்கு வழக்காடச் சட்டத்தரணியை ஏற்பாடு செய்ய பசில் ராஜபக்சே மூலம் உதவி பெறும்படி சுரேஸ் சாலே அறிவுறுத்தியிருந்தார். இதற்கிடையில் சுரேஸ் சாலே மலேசியா தூதரகத்துக்கு பாதுகாப்பு பிரதானியாக இடம் மாற்றப்பட்டார். ஜனாதிபதி சட்டத்தரணி திரு அனில் சில்வாவை பசில் ராஜபக்சே ஏற்பாடு செய்து வழங்கினார்.
பிள்ளையான் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை முன்கூட்டியே முடிக்க ஒத்துழைக்க வேண்டாம் என சுரேஸ் சாலே அறிவுறுத்தியிருந்தார். வழக்கு தவணையின் போது நேரம் கேட்டு ஒத்திவையுங்கள் எனவும் சொல்லி இருந்தார். நாங்கள் சட்டத்தரணியோடு கதைத்து அந்தத் தந்திரோபாயத்தை கடைப்பிடித்தோம்.
நான் ஒவ்வொரு வாரமும் அனுமதி பெற்று பிள்ளையனைச் சந்தித்தேன்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையனுக்கு தனியான ஒரு பெரிய அறை கொடுத்திருந்தார்கள். பிள்ளையான் சிறைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தினார். அந்தத் தொலைபேசி சிறைக்காவலர் ஒருவர் ஊடாக நான்தான் அனுப்பி வைத்தேன். அந்தத் தொலைபேசியில் இரவில் என்னோடு கதைத்தார். 2017 ஆவணி மாதம் சந்திக்கப் போன போது பிள்ளையான் சிறையில் தங்க வைக்கப்பட்டு இருந்த காத்தான்குடி முஸ்லிம் நபர்களை என்னை சந்திக்கும் படி சொன்னார். 2017 ஆவணி மாதம் 2வது கிழமை சிறைச்சாலைச் அத்தியட்சர் அக்பரின் அனுமதியுடன் ஒரு சிறைக்காவலர் அவர்களில் ஒருவரை என்னுடன் பேச அழைத்து வந்தார். நானும் பிள்ளையனும் அவரும் சந்தித்தோம்.
அவர் தன் பேர் சைனி மௌலவி என்று சொன்னார் (தற்கொலை குண்டுத் தாக்குதாரர்களின் தலைவர் சஹரான் மௌலவியின் சகோதரர்). சில சம்பாஷணைகளுக்கு பிறகு அவர் போய்விட்டார். சந்திப்புக்கு பின்னர் பிள்ளையான் சொன்னார்:
“இவர்கள் கடும் விஷயமான ஆக்கள். வழக்கு முடிந்து வெளியில் வருவார்கள். கஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வோம். அவர்கள் பின்பு எங்களுக்கு உதவி செய்வார்கள்.”
குறிப்பாக சைனி மௌலவியின் மனைவியின் தம்பியிடம் ரூபா 50,000 கொடுக்க சொன்னார். அடுத்தநாள் சைனி மௌலவியின் மச்சான் தொலைபேசி எடுத்தார். நான் எங்கள் காரியாலயம் மட்டக்கிளப்பு லேக் ரோட்டில் இருக்கிறது. அங்கு வரச் சொன்னேன். அங்கு அவர் வந்து ரூபா 50,000 கொடுத்தேன்.
சம நேரத்தில் பிள்ளையான் சுரேஸ் சாலேயோடு 2 முறை தொலைபேசியில் கதைத்தார். 2017 புரட்டாதி முதல் கிழமை சுரேஸ் சாலே பிள்ளையானை சந்திப்பதற்கு சில்வா என்கிற ஒருவரை அனுப்பி இருந்தார். அந்த நபர் எங்கள் காரியாலயத்திற்கு வந்தார். நானும் அவரும் என்னுடைய வாகனத்தில் சிறைச்சாலைக்குப் போனோம்.
சில்வா தமிழ் நன்றாகக் கதைத்தார். சிறைச்சாலைக்குள் போவதற்கு என்னுடைய பேரில் பதிந்து கூட்டிக் கொண்டு போனேன். 20 நிமிடம் கதைக்க அனுமதி தந்தார்கள். ஆனால் 20 நிமிடம் கதைக்கப் போனவர் 2 மணித்தியாலம் கதையை நிறுத்தவில்லை. சிறைக்காவலர் தனக்குப் பிரச்சனை வரப்போகுதென்று பயப்படத் தொடங்கினார்.
நான் பிள்ளையானும் சில்வாவும் கதைத்து கொண்டுவிருந்த சிறை அறைக்குள் புகுந்த பிறகு, அவர்கள் கதைப்பதை நிறுத்தினார்கள். அதன் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. சில்வா வந்து போன பிறகு மேற்குறிப்பிட்ட முஸ்லிம் ஆட்களைப் பிணை எடுக்க வேண்டும் என பிள்ளையான் கூறினார்.
காசு கொஞ்சம் ஒழுங்கு பண்ண பிள்ளையான் சொன்னார். ரூபா இரண்டரை இலட்சம் அளவில் வேண்டும். சுரேஸ் சாலேயிடம் கேட்க வேண்டும் என பிள்ளையான் கூறினார். நான் சுரேஸ் சாலேயிடம் பிணை எடுப்பதற்கு காசு இரண்டரை லட்சம் தரும்படி கேட்டேன். சுரேஸ் சாலே தான் மொகமட் அவர்களிடம் சொல்லி ஒழுங்குபண்ணுவதாக கூறினார்.
எங்கள் செப்டம்பர் மாத சம்பளத்தோடு சேர்த்து இரண்டரை லட்சம் மேலதிமாகத் தரப்பட்டது. நான் அந்தக் காசை சைனி மௌலவியின் மச்சானிடம் கொடுத்தேன். பின்பு பிணை எடுப்பதற்கு ஓட்டமாவடி சட்டத் தரணி ராசிக் ஐ ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன். அவர்கள் 24.10.2017 யன்று பிணையில் வெளியில் வந்தார்கள்.
2018 ஜனவரி மாத கடைசியில் மேற்படி பிணையில் வந்தவர்களை சுரேஸ் சாலே சந்திக்க விரும்பினார் என்று பிள்ளையான் சொன்னார். அந்தக் கலந்துரையாடலை ஒழுங்குபடுத்திக் கொடுக்கச் சொன்னார். அந்தக் கலந்துரையாடலுக்கு என்னையும் போகச் சொன்னார், இராணுவ வாகனத்தில் போக அறிவுறுத்தினார். நான் சைனி மௌலவிக்குப் முதல்நாளே போன் பண்ணி, “எனக்கு இப்படிக் கூட்டம் இருக்கிறது. அவர்களின் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருங்கள்” என சொல்லி வைத்தேன். பிள்ளையான் தொலைபேசியில் ஏற்கனவே கூறியதாகச் சொன்னார்.
சுரேஸ் சாலே தொலைபேசி எடுத்தார். “தானும் வந்து கொண்டிருக்கிறேன்” என உறுதிப்படுத்தினார். புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலை போல் வளர்ந்திருந்த இடத்தில கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது. அங்கு எனக்கு சைனி மௌலவி ஒருத்தரை மட்டும்தான் தெரியும். சைனி மௌலவி தான் எனக்கு தனது சகோதரரை அறிமுகப்படுத்தினார். அவர் தனது பெயர் சஹ்ரான் என்று சொன்னார். சுரேஸ் சாலே அவர்களிடம், “சஹ்ரான் மௌலவியை நான் தான் அறிமுகப்படுத்தினேன்” என்று கூறினார். சஹ்ரான் சொன்னார், “இவரைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன்.” உடனே அவர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளே நுழைந்தனர்.
நான் வெளியில் நின்றிருந்தேன். கூட்டம் 3 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு சுரேஸ் சாலே தனியாக என்னைக் கூப்பிட்டு, “பிள்ளையான் சிறையிலும் வழக்கிலும் வெளியிலை வருவதென்றால், கோத்தபாயா ஜனாதிபதியாக வந்தால் மாத்திரமே முடியும். இல்லையெனில் பிள்ளையான் மட்டுமல்ல எல்லோரும் உள்ளே போக வேண்டியிருக்கும்” என எச்சரித்தார். அடுத்தநாள் பிள்ளையானைச் சந்தித்து நடந்த விபரங்களை எல்லாவற்றையும் சொன்னேன். பிள்ளையான் கோத்தபாயாவை வெல்ல வைக்க சுரேஸ் சாலே பெரிய பிளானில் வேலை செய்கிறார்.
“நாங்கள் அதற்கு உதவி செய்யவேண்டும். அப்போதான் நான் வெளியிலே வரலாம்” என்று கூறினார். 11.2.2018 அன்று செப்டம்பரில், நாங்கள் (நான், பிரசாந்தன், தேவராஜ், இனியபாரதி) கோத்தபாயாவை சந்தித்தோம். அங்கு ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண இருந்தார். கோத்தபாயா, “நான் ஜனாதிபதி தேர்தலில் வென்றால் பிள்ளையனை விடுவிக்க முடியும். முழுமையாக வேலை செய்யுங்கள்” எனக் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019 அன்று, சுரேஷ் சாலே காலை 7 மணியளவில் என்னைத் தொடர்பு கொண்டார். கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு உடனடியாகச் சென்று, அங்கு காத்திருக்கும் ஒருவரை அழைத்து வருமாறு சொன்னார். நான் தற்போது மட்டக்களப்பில் இருக்கிறேன், கொழும்பில் இல்லை என்று சுரேஷ் சாலே அவர்களுக்கு பதிலளித்தேன். இந்த உரையாடலுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடந்தன. தாக்குதல்களுக்குப் பிறகு உடனடியாக பிள்ளையான் ஒரு சிறைக் காவலர் மூலம் எனக்கு ஒரு செய்தியை அனுப்பி, தன்னை அவசரமாகச் சந்திக்கச் சொன்னார்.
பிள்ளையானைச் காலை 11 மணிக்கு சந்தித்தேன். யாருக்கும் ஒன்றும் தெரியாத நேரத்தில் பிள்ளையான், “நீ வாயை மூடிக் கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு. இது எங்களுடைய கூட்டாளிகளின் வேலையாகும். சுரேஸ் சாலே கூட்டாளிகளின் வேலையாகவே இருக்கிறார். இது நமக்கு நல்லது. அரசாங்கம் எப்படியும் மாறும்” என கூறினார். பின்னர் சைனி மௌலவியை அழைத்து நிலைமைகளை விசாரிக்க சொன்னார்
இருப்பினும், சைனி மௌலவியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மாலையில் ஊடகங்களில் வந்த செய்திகளின் ஊடக பிள்ளையானின் வேண்டுகோளின் பேரில் வனாத்துமுல்லையில் நான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சுரேஸ் சாலே அவர்களை சந்தித்தவர்கள் தான் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட குண்டுதாரிகள் என அறிந்தேன்.
அதே போல சுரேஷ் சலே என்னை தாஜ் சமுத்ரா ஹோட்டலிலிருந்து அழைத்து வர சொன்ன நபர் ஜமீல் என்பதையும், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்த பணிக்கப்பட்ட குண்டுதாரி என்றும், பின்னர், கடைசி நிமிடத்தில் திட்டங்களை மாற்றியமைத்து, தாஜை விட்டு வெளியேறி, தெஹிவளையில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார் என்பதையும் பின்னர் தெரிந்து கொண்டேன். ஐப்பசி 15, 2021 அன்று சுரேஸ் சாலே கோத்தபாயா அதிகாரத்திற்கு வந்த பின்னர் சுரேஸ் சாலே அவர்களை மீண்டும் சந்தித்தேன். தனது அறைக்குள் வைத்துத் தனது கணனியில் பாராளமன்றத்தில் ஹரின் பெர்னாண்டோ பேசிய வீடியோவை பார்க்கும்படி சொன்னார்.
அதே போல ஆயர் சிறில் காமினி அவர்கள் பேசிய வீடியோவும், பாராளமன்ற உறுப்பினர் நளின் பண்டார அவர்களின் வீடியோவும் பார்க்க சொன்னார். “இவர்கள் சஹரான் குழுவுக்கும் இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்கிறது என சொல்லுவது பற்றி தெரியுமா?” என கேட்டார். நான் சஹ்ரானைச் சந்தித்தது எனக்கும், பிள்ளையானுக்கும் தான் தெரியும். நீ தான் சொல்லியிருக்க வேண்டும் என சொன்னார். அதற்குப்பிறகு என்னைக் கடுமையாக விசாரித்தார். நான் யாரோடும் இதைப் பகிரவில்லை. கைத்தொலைபேசியைச் சோதனை செய்தார்.
2007 இல் இருந்து அவரை அறிந்தேன். அன்று தான் மிகக் கடுமையாக இருந்தார். 10 மணிக்கு போனேன், 1 மணிக்குத் தான் வெளியே விட்டார். இவர் என்னைக் கடுமையாக சந்தேகிக்கிறார் என்று விளங்கியது. வெளியே வந்து பிள்ளையானுக்கு தொலைபேசி எடுத்தேன். சுரேஸ் சாலே என்னைக் கூப்பிட்டு கடுமையாக விசாரித்தார். சந்தேகப்படுகிறார். எனக்குப் பயமாக இருக்கின்றது என சொன்னேன். ஓக்டோபர் 16 ஆம் தேதி, பிள்ளையான் தனியே சுரேஸ் சாலேவை சந்தித்தது அமலன் (சாரதி) மூலம் எனக்கு தெரியவந்தது. பிள்ளையான் என்னிடமும் சொல்லவில்லை. பிள்ளையனும் சுரேஸ் சாலே போல என்னை சந்தேகிக்க தொடங்கி விட்டார் போல இருந்தது. நான் இராணுவத்தை காட்டி கொடுத்ததாக அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டதால் கடுமையாக அஞ்சத் தொடங்கினேன்.
இலங்கையிலிருந்து தப்பி சென்றிருக்கும் பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா ஈஸ்டர் தாக்குதல் சதி முயற்சிகள் தொடர்பாகவும், சுரேஸ் சாலே மற்றும் பிள்ளையான் தொடர்புகள் குறித்த மிக நீண்ட வாக்குமூலத்தின் ஒரு பகுதியே இது. உண்மையில் ஈஸ்டர் தாக்குதலின் Mastermind அடையாளம் காணப்படும் சுரேஷ் சாலே யாழ்ப்பாணத்தில் அருண் சித்தார்த் தலைமையில் ஆவா குழு, கிரீஸ் மனிதன் உட்பட்ட கொடூரங்களை செய்வித்த நபர் ஆவர்.
அதே போல இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண போதனசாலை பணிப்பாளர் வைத்தியர் திரு சத்தியமூர்த்தி உட்பட வைத்தியர்களை அச்சுறுத்தி பத்திரிகையாளர் மாநாட்டில் பொய் சொல்ல தூண்டிய சூத்திரதாரியாகவும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அடையாளம் காணப்பட்டு இருந்தார். இது தவிர கோட்டாபய ராஜபக்சே பாதுகாப்பு செயலாளாராகவிருந்த போது நடைபெற்ற பல்வேறு அரசியல் கொலைகளிலும் இவருக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஒரு நியாயமான நேர்மையான விசாரணை மூலம் கடந்த காலங்களில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் முதல் பல்வேறு இருண்ட கொடூர பக்கங்களுக்கு விடைகளை கண்டறிய முடியும். ஆனால் பொது நிர்வாகம் முதல் சகல விடயங்களையும் வெறும் அரசியலாக அணுகும் ஜேவிபி இந்த விவகாரத்தை எப்படி அணுகும் என்பது வெறும் 3 நாட்களில் ஊகிக்க கூடியதாக இருக்கும்
விசேடமாக 11 மில்லியன் ரூபா பொது நிதியில் அரசியல் மாநாடு வைத்து போதை பொருளை ஒழிக்க முடியும் என கதை சொல்லும் ஜேவிபி ரூபா 7.6 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலக்கரி மோசடி விவகாரத்தில் சொல்லிவருவது போல எதாவது புனை கதை சொல்லவும் வாய்ப்பிருக்கின்றது.
நன்றி... இனமொன்றின் குரல்


