பலதும் பத்தும். 02.12.2025 - பாதிக்கப்பட்ட மக்களுக்கான UAE நிவாரண உதவி !
பதுளை செங்கலடி வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
- இரு நாடுகளும் பல மாதங்களாக பரஸ்பரமாக வான்வெளிகளை மூடிய போதிலும், முறையான கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கைக்கான அனர்த்த உதவிகளை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் வானூர்திகளை இந்தியா தனது வான்வெளியைக் கடக்க அனுமதித்தது.
- இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பரவலான அழிவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட புடின், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் இலங்கையுடன் ரஷ்யாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
- மறு அறிவித்தல் வரும் வரை நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது - கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன,
- பாதிக்கப்பட்ட மக்களுக்கான UAE நிவாரண உதவி இலங்கையை வந்தடைந்தது..!
- அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையினருக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நிவாரணப் பொருட்கள் ஏற்றிய சிறப்பு விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
- இயற்கை அனர்த்தத்தால் முற்றாக சேதமடைந்த சிவனொளிபாதமலையின் வழிப்பாதையை சீரமைக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.
- மினிப்பே - நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மினிப்பே - நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 12 வீடுகள் மண்சரிவில் சிக்குண்டுள்ளன.
- பதுளை செங்கலடி வீதியில் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
- சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது. அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 276 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 51 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 4547 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


