ஒரு திட்டம் இல்லாத போருக்கு வரமுடியாது பிரித்தானியா!
ட்ரம்பின் அழுத்தங்களை நிராகரித்து நெத்தியடி கொடுத்த பிரித்தானியப் பிரதமர்!
மத்திய கிழக்கில் ஈரான் மீதான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த யுத்தத்தில் பிரித்தானியா இணையப்போவதில்லை எனப் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். "ஒரு திட்டம் இல்லாத போருக்கு வரமுடியாது பிரித்தானியா" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ள அவர், போரில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழுத்தங்களை முற்றாக நிராகரித்துள்ளார்.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
கொள்கைகளில் உறுதி: பிரித்தானிய இராணுவத் தளங்களை அமெரிக்கப் போர் விமானங்கள் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், மத்திய கிழக்கு நோக்கிப் பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பவும் அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், "நான் எனது கொள்கைகளில் உறுதியாக நிற்கின்றேன். ட்ரம்பின் அழுத்தங்களுக்குப் பணியமாட்டேன்" எனப் பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெளியேறும் திட்டம் (Exit Plan): சட்டபூர்வமான மற்றும் முறையான திட்டம் இருந்தால் மட்டுமே பிரித்தானியப் படைகள் களமிறக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். "முழுமையான கள நிலவரம் தெரியாமலும், போரிலிருந்து வெளியேறும் எவ்வித திட்டமும் இல்லாமலும் எமது படைகளை ஆபத்தில் தள்ள முடியாது. அவ்வாறு திட்டமில்லாமல் பிறரைப் பின்பற்றிச் செல்வது தலைமைத்துவம் அல்ல, அது வெறும் பின்தொடர்தல் (Following)" என ட்ரம்பிற்கும், தன்னை விமர்சிக்கும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளுக்கும் அவர் பகிரங்கப் பதிலடி கொடுத்துள்ளார்.


