39 பேர் உயிரிழப்பு: கரூர் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் பங்கேற்று 39 பேர் உயிரிழந்த நிலையில், அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உட்பட தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வரும் தவெக தலைவர் விஜய் நேற்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். காலை நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், இரவு 7 மணியளவில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்களிடம் உரையாற்றினார். இந்த கூட்டத்தில், தவெக தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி முதலில் பெண் ஒருவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து 50 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மயங்கியவர்களை உடனடியாக மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்து கரூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 39 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டும் என்றும் அறிவித்தார். இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
விஜய் பரப்புரையில் பங்கேற்ற 39 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உட்பட தவெக நிர்வாகிகள் மீது கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை போலீசார் கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


