தமிழ்ச் சமூகம் எனக்கு எவ்வளவு வேண்டியதாக இருக்கின்றதோஇ அவ்வளவு தமிழ்ச் சமூகத்திற்கும் நான் வேண்டியவராக இருக்கின்றேன்.
"ஆரம்பத்தில் ஆயுதங்களின் பிரயோகத்தை நான் ஆதரிக்கவில்லை. இம்மக்களைப் பாதுகாப்பதற்கு இதுவே தவிர்க்கமுடியாத ஒரே வழியென நிச்சயம் ஆனபோது, அதனை வரவேற்றேன்."
இலண்டன் கார்டியன் பத்திரிகையில் கபிரியலா கமினி என்ற பத்திரிகை நிருபர், வடக்கில், புலிகளின் முகாம் ஒன்றில் தான் சந்தித்த விடுதலைப் பெண்புலி அடேல் பாலசிங்கத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அவர் வெள்ளை இனத்தவர். 40 வயதுடைய அவர் பிரிட்டிஷ் பிரஜை. வீட்டுத் தோட்டம் செய்வதில் விருப்புள்ளவர். அவர் AK 47 தானியங்கித் துப்பாக்கியை தோளில் சுமந்திருந்தார். உயிருடன் பிடிபடும் போது கடிப்பதற்காக சைனைட் குப்பியை கழுத்தில் மாலையாக அணிந்திருந்தார். அவர் அணிந்திருக்கும். தொளதொளப்பான நீளக் காற்சட்டையின் மேல், இடுப்பைச் சுற்றிக் கட்டியிருக்கும் வார்ப்பட்டையில், எறிகுண்டுகளும், ரவைகளும் காணப்பட்டன.
தமிழ்ச் சுதந்திரப் போராளியான இவர் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். முதல் பார்வையில், மெலிந்தவராகவும், மென்மையாகப் பேசுபவராகவும் தோற்றம் தந்தார். தனது பொழுதுபோக்கு மரக்கறித் தோட்டத் தில் கழிகிறது, என்று கூறும் அவரது தோளில் தொங் குகின்ற AK 47 தானியங்கித் துப்பாக்கி, அவரைப் பற்றி வேறொரு கதையைச் சொல்லிக்கொண்டிருந்தது.
இலங்கையில் இரத்தம் சிந்தலுடன் நடைபெறும் உள்நாட்டுப் போரின் மத்தியில் 10 ஆண்டுகள் அவர் வாழ்ந்துவிட்டார். சேறு நிறைந்த பதுங்கு குழிகளுக்குள் தாக்குப் பிடிக்கக் கற்றுக் கொண்டுள்ளார். ஒருமுறை இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையில் பிடிபடாமல் நீர் நிறைந்த வயல் வெளிகளினூடு 48 மணித்தியாலங்கள் ஓடித் தப்பியுள்ளார். குண்டுகள் அவரது இருப்பிடத்திற்கு மிக அருகில் விழும்போது, படுக்கை வசதிகளைத் தூக்கி எறிந்து பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியும் தயார் நிலையிலேயே அவர் இருந்தார்.
70 ம் ஆண்டுகளின் பின்னர் சிறீலங்கா ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரமான தமிழரின் தாயகத்தை அடைவதற்காகப் போராடும், தமிழ்ப் புலிகளின் ஒரு கெரில்லாவாகவே அவர் இருந்துவருகின்றார். 1978 ம் ஆண்டு தமிழர் ஒருவரை லண்டனில் திருமணம் செய்த பின்னர், மெல்பேர்ண் நகரில் ஆசிரியராகப்போகும் வாய்ப்பைத் துறந்து, வடக்குகிழக்கின் உலர்வலயக் காட்டினுள்ளே தனது வாழ்க்கையை அமைத்தார். அவர் லண்டனில் பல்தொழிற் கல்லுாரி ஒன்றில் சமூகக் கல்வி பயின்று கொண்டிருந்த வேளை, லண்டன் கோல்ட் ஸ்மித் கல்லுாரியில் பணிபுரிந்த விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக விளங்கும் அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித்தார். "அப்போது நாங்கள் இருவரும், இங்கிலாந்தில்
இனவாதத்திற்கும், நவபாஸிஸ குழுக்களுக்கும் எதிராகப் போராடி வந்தது, எங்கள் இணைவுக்குக் காரணமாயிற்று." என்று தெரிவித்த அடேல், பெரும்பான்மைச் சிங்களவர்களால் தமிழ் மக்கள் அடக்கப்படுவது குறித்து, பாலா தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். (பாலா என்று அழைக்கப்படுவது, தற்போது தமிழ்ப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக இருக்கும் அன்ரன் பாலசிங்கம்.) "அதனை நேரில் இலங்கைக்கு வந்து கண்டுகொண்டேன். அதனைத் தொடர்ந்து நான் புலிகளுடன் சேர்ந்துவிட்டேன்" என்று அடேல் மேலும் கூறினார்.
அடேல் பாலசிங்கம், அரசியல் வழிகளினூடு தமிழர்கள் தங்கள் சுயஆட்சியை அடையமுடியுமென்று முன்னர் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டார். மூன்று வருடம் மிகக் கடுமையான இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் இதுவரைக்கும் அவர் எவரையும் கொல்லவில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது அதனைச் செய்யத் தயங்கப் போவதில்லை.
"தமிழ் மக்களுக்கு சுயஆட்சியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றால் நான் எதனையும் செய்யத் தயாராக உள்ளேன். சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் எனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டேன். ஆரம்பத்தில் ஆயுதங்களின் பிரயோகத்தை நான் ஆதரிக்கவில்லை. இம்மக்களைப் பாதுகாப்பதற்கு இதுவே தவிர்க்கமுடியாத ஒரே வழியென நிச்சயம் ஆனபோது, அதனை வரவேற்றேன்." என்று அடேல் கூறினார்.
"இந்த நாட்டை ஆட்சியாளர்கள் துப்பாக்கி அதிகாரத்தால் ஆளுகின்றார்கள். சிங்கள ஆயுதப்படைகளின் தாக்குதல்களில் இருந்து எமது மக்களைப் பாதுகாக்க எம்மிடம் உள்ளவை இவ்வாயுதங்களே" என்று கூறிய அடேல், 1983,1987 ம் ஆண்டுப் படுகொலைகளின் போது ஆயிரக்கணக்கான தமிழ்ப்பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
"தமிழ்ப் பகுதிகள் இரவும், பகலும் குண்டு வீச்சுக்கு உள்ளாகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறுகின்றார்கள் ஆனால், முழுச்சமூகத்திற்கும் எதிரான போராகவே உள்ளது" என்று கூறினார். (வடபகுதியில், அவரின் காட்டு மறைவிடத்தில் நாம் அப்போது இருந்தோம். இரவு நேரம் அண்மையில் உள்ள கிராமங்களில் குண்டுமாரி பொழிந்த வண்ணமிருந்தது.)
போரில் காயம்பட்ட பொதுமக்களுக்கு சேவைசெய்யும் பொருட்டு வைத்தியசாலை ஒன்றில் கடமை புரிந்துவந்தார். "புலிகளின் குரல்" என்ற ஆங்கில சஞ்சிகை வெளியீட்டிலும் பங்கு பற்றினார். நாளும் எண்ணிக்கையில் வளர்ந்துவந்த விடுதலைப் புலிகளின் இராணுவ அணியில் சேரும்படி பெண்களைத் துாண்டிவந்தார்.
"பெண்கள் போதும்போதும் என்ற அளவு துன்பத்திற்கு ஆளாகின்ற காரணத்தால், அவர்கள் இதில் இணைவது அவசியம் எனக் கருதினேன்" என்று அடேல் கூறினார். பெண்களை மட்டுமே கொண்ட முகாம்களை அமைத்ததோடு, அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வந்தார். அவர்கள் இராணுவ இலக்குகள் மீது தாங்களே திட்டமிட்டு தாக்குதல்களை நடத்திவருகின்றனர். "இப் பெண்களில் சிலர் சிறீலங்கா இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர், தமது குடும்பத்தினர் கொல்லப்படுவதைக் கண்டுள்ளனர். எனவே, தங்கள் மக்களைப் பாதுகாக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது" எனக் கூறினார்.
விடுதலைப் புலிகளின் போர் அணியில் 3000 பெண் போராளிகள் இருக்கின்றனர். வீட்டையும், குடும்பத் தையும் கட்டிக்காக்கும் பாரம்பரியமுடைய இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இச்சமூகத்தில், இவ்வளவுத் தொகைப் பெண்கள் போராளிகளாக உள்ளது பெரிய விடயமே. "தமிழீழச் சமூகம் போராட்டத்தில் கொண்டுள்ள உறுதியான உணர்வையே இது காட்டுகின்றது" என்று கூறிய அடேல், ஆண் ஆதிக்கம் உள்ள இச்சமூகத்தில் பெண்களின் உரிமைகளை தாங்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
காட்டினுள் ஒரு மறைவிடத்தில் இருந்து இன்னொரு மறைவிடத்திற்கு மாறி வாழும் தலைமறைவு வாழ்க்கை எளிதானதல்ல; இது தனது வாழ்க்கையின் ஒரு அம்சமாகி விட்டதாகவும், இதிலிருந்து ஒரு போதும் விலகிச் செல்லப் போவதில்லை என்றும் கூறினார். "எனது சகோதரர்களும், சகோதரிகளும், நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என வியந்து கொண்டிருக்கலாம்; ஈழம் என்கின்ற தமிழ் நாடுதான் எனது வீடு. தமிழ் மொழியும் பேசக் கற்றுள்ளேன். (அவுஸ்திரேலியாவில் இருக்கும்) எனது பெற்றோர்கள், நான் திரும்பி வரமாட்டேன் என்பதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன்" என்று கூறினார்.
"அவர்கள் (பெற்றோர்) என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் எனது நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் இதில் மிக நெருக்கமாக இணைந்து கொண்டுவிட்டேன். இந்தச் சமூகம் எனக்கு எவ்வளவு வேண்டியதாக இருக்கின்றதோ, அவ்வளவு இச்சமூகத்திற்கும் நான் வேண்டியவராக இருக்கின்றேன். கெரில்லாப் போரோடு வாழக்கற்றுக் கொண்டுவிட்டேன்." இடையில் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்த AK 47 துப்பாக்கி ரவைப்பட்டியைச் சரிசெய்தவாறு, "தமிழருடைய இலட்சிய வெற்றிக்காக நான் இறக்கவும் தயாராக இருக்கின் றேன்." என்று கூறினார்.
எரிமலை இதழ்
ஜூன் 1991


