திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் எங்கே ஏற்றுவது? நேரில் ஆய்வு செய்த நீதிபதி!
எப்போதும் போல திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதா? அல்லது பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் ஏற்றுவதா? என்பது குறித்து நீதிபதியே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் நேரில் சென்று விளக்கு ஏற்றும் இடங்களை ஆய்வு செய்தார்.
திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவின் போது பொதுவாக மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மலை மீதுள்ள பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பில் கார்த்திகை தீப விவகாரத்தில் பிற மதத்ததைச் சேர்ந்தவர்கள் யாரும் போராடவில்லை. தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறை தரப்பு தான் பிரச்சனை செய்கிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அரசு தரப்பில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டுமென கோருவது எப்படி? அதற்கான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி கோரப்பட்டது. தற்போது குறிப்பிட்ட இடத்தில் ஏற்ற வேண்டுமென்பதை உரிமையாகக் கோரியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "மலை மீது" என்றே உத்தரவில் கூறப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார். அரசுத் தரப்பில், "உச்சிப்பிள்ளையார் கோயிலும் மலை மீதே உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு மேற்கொண்ட நீதிபதி
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சம்பந்தப்பட்ட திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதியை நான் நேரில் ஆய்வு செய்கிறேன் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூண் அமைந்துள்ள பகுதியை ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகர காவல் துணை ஆணையாளர் இனிகோ திவ்யன் தலைமையில் நீதிபதிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
மேலும் அறநிலையத் துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில் அலுவலர்கள் உடன் சென்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நீதிபதி சுவாமிநாதன் மலை மீது ஏறிச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது வினோதமான முறையில் ட்ரோன் கேமரா மலையை சுற்றி பறந்தால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு மேற்கொண்ட நீதிபதி
இதையும் படிங்க: SIR பணி நெருக்கடி: வருவாய்த் துறையினரின் புறக்கணிப்பு போராட்டம் ஒத்திவைப்பு!
முன்னதாக இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் மலை தர்ஹா தரப்பையும், தொல்லியல்துறையும் எதிர்மனுதாரராக சேர்க்கவும், தர்ஹா தரப்பிலும் தங்கள் விளக்கத்தைத் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் நவம்பர் 24ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.


