2009 இற்கு பின்னர், தமிழ்நாட்டில் பெரும் ஆயுதப்போராட்டம் தோன்றியிருக்கும்” - முன்னாள் நாம் தமிழர் கட்சியினர் சீமான் மீது வைக்கும் குற்றச்சாட்டு“!
தமிழ்நாட்டில் உருவாகிய ‘தனி தமிழ்நாடு’ எனும் வேட்கையை சீமான் இந்திய உளவு அமைப்போடு சேர்ந்து மடைமாற்றி விட்டார்!
முன்னாள் நாம் தமிழர் கட்சியினர் சீமான் மீது வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டுதான் “2009 இற்கு பின்னர், தமிழ்நாட்டில் உருவாகிய ‘தனி தமிழ்நாடு’ எனும் வேட்கையை சீமான் இந்திய உளவு அமைப்போடு சேர்ந்து காயடித்துவிட்டார். இல்லையெனில் தமிழ்நாட்டில் பெரும் ஆயுதப்போராட்டம் தோன்றியிருக்கும்”.
இந்த குற்றச்சாட்டை நான் பல வருட காலமாக கேட்ட போதும், பதிலளிக்காமல் சென்றுவிடுவேன். ஏனெனில் சக தமிழ்தேசிய உணர்வாளருடன் சண்டை பிடிப்பதை முடிந்தவரை தவிர்த்து வருகிறேன்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை எந்தவித தர்க்கரீதியான காரணங்களும் இல்லாமல், தொடர்ந்து வைத்துவருகிறார்கள். இதனது உண்மை தன்மை என்ன? “2009 இற்கு பின்னர், தமிழ்நாடு தனி நாடு கேட்டிருக்கும்” என்பது “இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது” என்ற வகைதான். சீமான் மடைமாற்றினாரா இல்லையா என்பதை கண்டறிய, தமிழ்நாட்டிற்கு “தனி தமிழ்நாடு எனும் வேட்கை இருக்கிறதா?” என்ற கேள்விக்கான பதிலை கண்டறிய வேண்டும். தமிழ்நாடு தனி நாடாகவேண்டும் என்ற வேட்கையை வைத்திருக்கிறது என்பதற்கு எங்கே ஆதாரம்? ஒன்றுமில்லை.
தொடர்ச்சியாக “தனி தமிழ்நாடு” எனும் அரசியல் இலக்கினை நோக்கி நகர்ந்து வந்ததற்கான பரிணாம வளர்ச்சி படிகள் எதுவும் இல்லை. இதனை விளக்கிக்காட்ட தமிழீழ போராட்டத்தை உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். இலங்கையில், ஒரு கட்டத்தில் தமிழீழ தமிழர்கள் ‘தனி தமிழீழமே இறுதி தீர்வு’ என்ற முடிவுக்கு வந்தார்கள்.அதை தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.
அதுதான் 1976 இல் நிறைவேற்றப்பட்ட ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ (வட்டுக்கோட்டை பிரகடனம்) ஆகும். இந்த வட்டுக்கோட்டை பிரகடனம், இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது.
இந்த ‘வட்டுக்கோட்டை பிரகடனத்தை’ அடிப்படையாக வைத்தே தமிழர் விடுதலை கூட்டணி 1977 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. தமிழ் மக்கள் தமது பெருத்த ஆதரவினை வழங்கி தமிழர் விடுதலை கூட்டணியை பெரும் வெற்றி பெற வைத்தார்கள். அதனாலேயே 1977 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் வழங்கிய இந்த தீர்ப்பு, வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பாக கருதப்படுகிறது.
இலங்கை அரசின் போக்கு சிறிது சிறிதாக தமிழ்மக்களை தமிழீழத்தை நோக்கி தள்ளியது. இலங்கை சுதந்திரம் அடைந்த 30 ஆண்டிற்குள்ளேயே தமிழீழ தமிழர்கள் ‘ தனி தமிழீழ நாடே இனி இறுதி தீர்வு’ என்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள். அதுதான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானமும், அதன் சர்வஜன வாக்கெடுப்பாக கருதி 1977 பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த விதமும். அதன் பின்னர் 1977 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசுடன் சோரம் போக, இதற்கு சமாந்தரமாக ஆயுதப்போராட்ட இயக்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்தன. அந்த ஆயுத இயக்கங்கள் “தமிழீழம்” என்ற இலக்கினை வைத்து, இலங்கை மீது சிறிய தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தன.
ஒட்டுமொத்த தமிழீழ மக்களும் ஆயுதப்போராட்டத்தில் உடனே குதிக்கவில்லை.
வட்டுக்கோட்டை தீர்மானம், பாராளுமன்ற தேர்தல் ஊடாக “தமிழீழமே இலக்கு” என்பதை கூறியிருந்தார்கள். ஆனால் ஒரு ஆயுதப்போராட்டம் மீது இருக்கும் இயல்பான மனத்தடை தொடர்ந்தும் இருந்தது. 1983 இல் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இலங்கை இராணுவம் கொல்லப்பட்டார்கள். இதற்கு எதிர்வினையாக இலங்கை அரசு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மீது வன்முறையை அவிழ்த்துவிட்டது. இது அரசே திட்டமிட்டு நிகழ்த்தியதால் pogrom என்கிறோம். அதுதான் “கறுப்பு ஜூலை வன்செயல்”. இதில் குறைந்தது 4000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அதுவரை ஆயுதப்போராட்டம் மீது இருந்த மனத்தடையை தூக்கி எறிந்தது இளைஞர் கூட்டம். சாரை சாரையாக ஆயுத இயக்கங்களில் இளைஞர்கள் இணைந்தார்கள்.
1985 இற்குள் ஆயுத போராட்ட இயக்கங்களில் இணைந்த தமிழீழ இளைஞர்களின் எண்ணிக்கை 50000 பேர். அன்று தொடங்கிய ‘இறையாண்மையுள்ள தமிழீழமே இறுதி தீர்வு’ என்ற இலக்கு, தலைவர் பிரபாகரனின் கடைசி மணித்துளி வரை தளர்வடையவே இல்லை. மேலே உள்ளதை வாசித்து பார்த்தால், தமிழீழ மக்கள் சிறிது சிறிதாக “தமிழீழத்தை” நோக்கி நகர்ந்ததை காணமுடியும். ஒரு பரிணாம வளர்ச்சி படிகள் இருப்பதை அவதானிக்கமுடியும். தமிழ்நாடு எப்போது ‘தனி தமிழ்நாடு’ கேட்டது? அதற்காக நடத்திய போராட்டங்கள் எங்கே? தனி தமிழ்நாடு கோரிக்கையை பிரதானமாக வைத்து எந்தெந்த அரசியல் கட்சிகள் தேர்தலில் குதித்தன? அதற்கு எந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ஆதரவளித்தார்கள்?
சரி. தனி தமிழ்நாடு கேட்டு இந்திய தேர்தல் அரசியலில் கட்சிகள் பங்கு கொள்ளமுடியாது. இதற்கு சமாந்தரமாக எந்த ஆயுதப்போராட்டமும் தொடர்ச்சியாக நிகழவில்லையே. ஒரு காஷ்மீர், நாகலாந்து, அஸாம், மணிப்பூர் போன்று ஒரு தொடர்ச்சி இல்லையே. ஏனெனில் “தனி தமிழ்நாடு என்ற வேட்கை” இன்றுவரை தமிழ்நாட்டு மக்களிடம் உருவாகியதில்லை.
பல வருடங்களுக்கு முன்பு “தமிழ்நாடும் கனடாவின் கியூபெக்கும்” என்ற கட்டுரை எழுதியிருந்தேன். அதில் இருக்கும் ஒரு பகுதியை மீள தருகிறேன். இந்த கட்டுரைக்கு பொருந்தி போகும். “இன்று ‘இந்தியாவிலிருந்து பிரிந்து இறையாண்மையுள்ள தமிழ்நாடு வேண்டுமா’ என்ற கேள்வியை முன்வைத்து தமிழ்நாட்டு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை வைத்தால், குறைந்தது 95% மக்களாவது ‘வேண்டாம்.இந்தியாவிலேயே தொடர்ந்து நீடிக்கிறோம்’ என்றுதான் வாக்களிப்பார்கள். இந்தியாவே தமிழ்நாட்டை வேண்டாம் என ஒதுக்கிதள்ளினால் கூட ‘நாங்கள் உங்கள் கூடவே இருக்கிறோம்’ என்றுதான் தமிழ் நாடு கூறும். இதுதான் கள யதார்த்தம். காரணம் assimilation நடந்து முடிந்துவிட்டது. இன்னும் முழுமை பெற கொஞ்சமே பாக்கி. இந்திய தேசியத்துடன் தேசிய இன மக்களுக்கு ஒரு பிணைப்பு உருவாகிவிட்டது.
தமிழ்நாட்டின் இந்த உளவியல் கியூபெக் மக்களின் உளவியலை போன்றதேதான். இந்தியாவுடன் இருக்கவும் வேண்டும். அதே நேரம் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களை தக்கவைக்கவும் வேண்டும். இதுதான் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை வகை. ஆனால் இரண்டையும் அடைவது சாத்தியமில்லை. இரண்டில் ஒன்று மட்டுமே சாத்தியம்.” தமிழ்நாடு இந்த நிலையில்தான் இருக்கிறது.
இதை நான் சவாலாகவே சொல்கிறேன். இந்திய அரசு நாளையே “தமிழ்நாடு தனி நாடாக பிரிந்து போக விரும்புகிறதா அல்லது இணைந்திருக்க விரும்புகிறதா” என சர்வஜன வாக்கெடுப்பு வைத்தால் கூட, தமிழ்நாடு இணைந்திருக்க விரும்புகிறோம் என்றுதான் வாக்களிக்கும். இதுதான் கள நிலை. இனி சீமான் மீதான குற்றச்சாட்டிற்கு வருவோம். தமிழ்நாட்டிற்கு தனியே பிரிந்து தனிநாடாக வேண்டும் என்ற ‘வேட்கையே’ இல்லாதபோது, இந்திய உளவு அமைப்பிற்கு சீமானுடன் சேர்ந்து காயடிக்கும் தேவை எங்கு வரும்? “இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது” என்றது இதற்காகத்தான். இதனுடன் இன்னொன்றையும் சொல்லவேண்டும். சீமான் தமிழ் இனத்திற்கு அளித்த பெரும் பங்களிப்பு என்ற ஒன்று உண்டு. அதுதான் புலிகளின் போராட்டத்தை அடுத்த தலைமுறை தமிழ்நாட்டு இளைஞர்களிடம் கடத்தியது.
இது சீமான் என்ற ஒரு மனிதன் இருந்திருக்காவிட்டால், நடந்தேயிருக்காது. 2009 இற்கு பிறகு, முந்தைய தலைமுறை தமிழ்நாட்டு தமிழர்களோடு முடிவடைந்து இருக்கும். புலிகளின் வீரஞ்செறிந்த போராட்டம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டிருக்காது. சீமான் இருந்திருக்காவிட்டாலும், “வைகோ, ரெட்ட சீட்டு திருமா, ராம்தாஸ், ஒத்த சீட்டு வேல்முருகன்” நடத்தியிருப்பார்கள் என ஒரு குருப் ஓடிவரும். வாயில் எனக்கு நல்லா வரும். இவர்கள் எல்லாம் ஊத்திப்போட்டு மூடியிருப்பார்கள்.
சீமான் செய்த இந்த பங்களிப்பு விலை மதிக்கமுடியாதது. சீமான் புலிகளின் போராட்டத்தை பற்றி பேசுகையில், மிகைப்படுத்தி, பிழையான தொனியில் சில தடவைகள் பேசி சொதப்பி இருந்தாலும் ஒட்டுமொத்தமாக சீமானின் பங்களிப்பு என்பது அபரிமிதமானது. இன்று தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க சதவீத இளைஞர்களுக்கு புலிகளின் போராட்டம் தெரிந்திருக்கிறது. உணர்வுபூர்வமாக புலிகளை நேசிக்கிறார்கள். நாம் தமிழர் என்றாவது ஒருநாள் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமோ இல்லையோ, சீமானின் “புலிகளின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்திய ஒரு பங்களிப்பிற்கே” தமிழினம் என்றென்றும் அவரை நினைவு கூறும்.
க.ஜெயகாந்த்


