காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்த தகவல்களை வழங்குமாறு, ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் அழைப்பு!
வழங்கப்படும் தகவல்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான முயற்சிகள், அவர்களின் குடும்பங்களை ஆதரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளாகும்.
மனித உரிமைகள் பேரவையிலும், செப்டெம்பர் 2026 இல் ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது கூட்டத்தொடரிலும் செயலாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்காக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்த தகவல்களை வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 79/173 இற்கு அமைய செயலாளர் நாயகத்தின் “தற்போதைய தீர்மானத்தை செயல்படுத்துவது குறித்த விரிவான அறிக்கைக்காக பொருத்தமான நடைமுறை பரிந்துரைகளை உள்ளடக்கியதாக” இந்தத் தகவல் கோரப்படுகிறது.
ஜூலை 1, 2024 முதல் ஜூன் 30, 2026 வரையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை உள்ளடக்கவுள்ள இந்த அறிக்கை, மனித உரிமைகள் பேரவையிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும்.
இந்த அறிக்கை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான முயற்சிகள், அவர்களின் குடும்பங்களை ஆதரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் விசேட தேவையுடயவர்கள் உட்பட அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் காணாமல் போவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்க தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை வெளிப்படையாக அழைக்கிறது.
இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்குப் பொருத்தமானதாகக் கருதப்படும் எந்தவொரு தகவலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் உட்பட, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்படலாம், குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதன் அறிக்கையில் பின்வரும் தகவல்களுக்கு குறிப்பாக கவனம் செலுத்தும் என வலியுறுத்துகிறது.
. நபர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட சட்ட மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள்;
· காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதி மற்றும் இருப்பிடத்தை வெளிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்;
· காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் நிலைமை;
· காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுத்தல் பற்றிய தகவல்கள்;
· காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காண்பது மற்றும் தடயவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்கள்;
· காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சட்ட நிலைமை மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவி, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் விசேட தேவையுள்ள நபர்களின் தேவைகளுக்கு கவனம் செலுத்துதல், சமூக நலன், உளவியல் மற்றும் உளவியல் சமூக ஆதரவு, நிதி விடயங்கள், குடும்பச் சட்டம் மற்றும் சொத்துரிமைகள் போன்ற விடயங்கள்; மற்றும்/அல்லது
· காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை செயல்படுத்துவது தொடர்பான வேறு ஏதேனும் பொருத்தமான தகவல்களை அலுவலகத்திற்கு அனுப்புமாறு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்படக்கூடாது என்று கோரப்படாவிட்டால், வழங்கப்பட்ட தகவல்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்தத் தகவலை ohchr-registry@un.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆங்கிலம், பிரெஞ்சு அல்லது ஸ்பானிய மொழிகளில், அதிகபட்சம் 3,000 வார்த்தைகளுக்குள், மார்ச் 2, 2026 இற்குள் சமர்ப்பிக்கலாம்.
இந்தத் தகவலைச் சமர்ப்பிக்கும் போது, மின்னஞ்சலின் Subject, "Inputs to SG report on missing persons" என்பதாக இருக்க வேண்டும், மேலும் தகவல் அடங்கிய குறிப்பு மின்னஞ்சலுடன் Word அல்லது PDF வடிவத்தில் இணைக்கப்பட வேண்டும்.


