தமிழரின் தனித்துவத்தைக் காப்பதற்கு மாகாணசபை அதிகாரங்கள் அவசியம்; நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு!
நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் கண்விழித்துவிட்டார்
மாகாணசபைத் தேர்தல் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு சில பெற்றுக்கொடுக்கக்கூடியது. அது இல்லாவிட்டால் சிங்களவரிடம் இருந்து கிடைக்கப்போவது மாகாண சபை முறைமையிலும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு முறைமையே. இதனை வலியுறுத்த தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்படாது. இந்தியா அதுபற்றிப் பேசவில்லை எனக் கூறுவது மடமையே. இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தல்கள் வேண்டுமா? இல்லையா? என்று முதலில் முடிவெடுக்கவேண்டியவர்கள் தமிழ்த் தேசியக்கட்சிகளே. அவர்களுள் ஒற்றுமை இல்லாத போது இந்தியா அது பற்றிப் பேசாதிருப்பதை நாம் பிழையென்று கூறமுடியாது. முதலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து தற்போதைக்கு மாகாணசபைத் தேர்தல் உடனே நடத்தப்படவேண்டும் என்ற முடிவை எடுக்கவேண்டும். இன ரீதியாக இந்த நாட்டை ஆள நினைக்கும் ஒரு மனித அலகு தமது அதிகாரத்தைக் குறைக்கும் அளவுக்கு நடந்துகொள்வார்களா? என்று நாம் சிந்திக்கவேண்டும். மாகாணசபைகள் கலைக்கப்பட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு ஜனநாயக நாடு எனப்படும் இந்த நாட்டில், மாகாண சபைத் தேர்தல் முறைமை எவ்வாறு அமையவேண்டும் என்ற கேள்வியை எழுப்பி, தேர்தல்கள் ஏழு வருடங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்று எமது தனித்துவம் வலியுறுத்தப்படாவிட்டால் நாம் சிங்கள மேலாதிக்கத்தின்கீழ் தொடர்ந்திருக்க நேரிடும். காலக் கிரமத்தில் எமது தனித்துவம் அழிந்துபோய்விடும். சிங்களக் கட்சியொன்று வடக்கு-கிழக்கில் தேர்தல்களில் வெல்ல முடியாது என்று இறுமாப்புடன் சொன்ன எங்களுக்கு அண்மையில் நடந்த கதி என்ன? ஆகவே இருப்பதைக் கைவசம் வைத்து எமது உரிமைகளை விரிவுபடுத்திச் செல்வதே எமக்கிருக்கும் ஒரேயொரு வாய்ப்பு. எனவே இப்போதுள்ள நிலையில் மாகாணசபைத் தேர்தல் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு சில உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது. அது இல்லாவிட்டால் சிங்களவரிடம் இருந்து கிடைக்கப்போவது மாகாணசபை முறைமையிலும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு முறைமையேயாகும் - என்றார்.


