“இப்போது ஏன் நடனமாடுகிறீர்கள்?” திருகோணமலை பிரச்சினை முடிந்துவிட்டதாகக் கூறும் ஜனாதிபதி
"விகாரையின் விகாராதிபதி ஒருவர் உரித்துடன் ஒரு காணியை வைத்திருந்தார். ஆனால் அங்கு மத வழிபாடுகளை செய்யும் இடம் இருக்கவில்லை. அதுதான் உண்மை,"
“இப்போது ஏன் நடனமாடுகிறீர்கள்?” திருகோணமலை பிரச்சினை முடிந்துவிட்டதாகக் கூறும் ஜனாதிபதி கேள்வி !
கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு காணியில் சட்டவிரோதமாக கட்டடத்தை அமைத்து வைக்கப்படவிருந்த புதிய புத்தர் சிலையை அகற்றிய பொலிஸார், அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய சிலையை மீண்டும் வந்து வைத்த இடமானது, பௌத்த விகாரை ஏதும் அமையப்பெற்றிராத இடம் என்பது தெரியவந்துள்ளது.
சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவப்படவிருந்த பிரெட்ரிக் கோட்டை வீதிக்கும் கடற்கரைக்கும் இடையிலான 40 பேர்ச் நிலம், 11 வருடங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதியால் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பௌத்த விகாரையின் விகாராதிபதி ஒருவருக்கு பரிசு பத்திரம் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜா விகாரையின் விகாராதிபதி மிஹிந்துபுர மஹிந்தவன்ச திஸ்ஸ என்ற தேரருக்கு 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நன்கொடையாக வழங்கிய காணியில் ஒரு விகாரை இருந்ததாக பரவிய வதந்திக்கு முற்றுற்புள்ளி வைக்க முயற்சித்த தற்போதைய ஜனாதிபதி, இது தொடர்பாக அறிக்கை கோரியதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
"விகாரையின் விகாராதிபதி ஒருவர் உரித்துடன் ஒரு காணியை வைத்திருந்தார். ஆனால் அங்கு மத வழிபாடுகளை செய்யும் இடம் இருக்கவில்லை. அதுதான் உண்மை," என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான விவாதத்தில் பங்கேற்றபோது கூறினார்.
புதிய கட்டுமானத்திற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காததால் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவால் நவம்பர் 16ஆம் திகதி அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட புத்தர் சிலையை, பொலிஸார் அகற்றினர். சிலையின் பாதுகாப்பிற்காகவே அது அகற்றப்பட்டதாக பொலிஸாரை மேற்கோள் காட்டி ஜனாதிபதி நாட்டின் சட்டவாக்க சபை உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான கடற்கரை காணியில் திடீரென வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
"நேற்று இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில், அதற்கு சேதம் ஏற்படுத்தப்படுவது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதற்கமைய, நேற்று இரவு புத்தர் சிலையை பொலிஸார் அகற்றி அதன் பாதுகாப்பை உறுதி செய்தனர். மேலும், நேற்று திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை எழுந்தது. இன்றைய நிலைமையின் படி, புத்தர் சிலையை மீண்டும் வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஏனெனில் இன்று முதல், இது தொடர்பாக முறையான பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்."
அதே நாளில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நாமல் ராஜபக்ச, புகைப்படங்களுடன் தனது பேஸ்புக் பக்கத்தில், “அமரபுர மகா நிகாயவின் கிழக்கு தமன்கடுவ பிரிவுகளின் தலைமை சங்கநாயக்கர், வெல்கம ரஜமகா விகாரை, உனு திய லிங் ராஜமகா விகாரை, பொரலுகந்த ரஜமகா விகாரை விகாராதிபதி, அகில இலங்கை சமாதான நீதவான், ஸ்ரீ ரத்தனவன்ச பௌத்த அறநெறிப் பாடசாலையின் வணக்கத்திற்குரிய அம்பிட்டியே சீலவன்சதிஸ்ஸ தேரர் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் சம்பவம் குறித்து விவாதிக்க பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்திற்கு வருகை தந்தனர்’ என பதிவிட்டிருந்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சர்ச்சைக்குரிய காணியை மீண்டும் அளவீடு செய்து எல்லை நிர்ணயம் செய்ய உடன்பாடு எட்டப்பட்டதன் மூலம் பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திற்கு உறுதியளித்த ஜனாதிபதி, ஆளும் கட்சியின் சிரிப்பலைகளுக்கு மத்தியில், “நீங்கள் இப்போது ஏன் நடனமாடுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
திருகோணமலை நகரின் கடலோர பாதுகாப்பு எல்லைக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளதாக, நவம்பர் 17 ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"16.11.2025 அன்று, திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் வணக்கத்திற்குரிய தேரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் குழுவால், திருகோணமலை கடலோர பாதுகாப்பு எல்லைக்குள், அனுமதியின்றி கட்டுமானம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தால் திருகோணமலை கரையோர பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய திருகோணமலை பிரிவு அதிகாரி மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டதோடு, இந்த அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை நிறுத்துமாறும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் கட்டுமானம் தடையின்றி தொடர்கிறது."
இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலுள்ள இடம் அத்தகைய அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தின் காரணமாக அகற்றிக்கொள்ளுமாறு, சுற்றுச்சூழல் அமைச்சு திருகோணமலை, கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதிக்கு 16.10.2025 அன்று எழுத்து மூலமாக அறிவித்ததாகவும், இந்த பின்னணியிலேயே 16.11.2025 அன்று இந்த கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, புத்தர் சிலையும் வைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
“ஒரு மத தலத்தை நிறுவுவதோடு, இதற்குப் பின்னால் மற்றொரு கதையும் உள்ளது,” என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடற்கரை பாதுகாப்பு சட்டங்களை மீறி ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரைக்குச் சொந்தமான காணியில் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த இடத்தில் உள்ள தேரர்கள் புதிய கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளதாகவும் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. டர்னி பிரதீப் குமார ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
விகாரைக்கு சொந்தமான காணியாக இருந்தாலும், கடற்கரையில் கட்டுமானப் பணிகளை கடற்கரையிலிருந்து 10 மீட்டர் தொலைவில் மாத்திரமே மேற்கொள்ள முடியுமென டர்னி பிரதீப் குமார வலியுறுத்துகிறார். இருப்பினும், அந்த காணியில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் கடற்கரையிலிருந்து சுமார் 4 மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமையவே உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூயிருந்தார்.
"மேலும், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளது, அங்கு முன்பு ஒரு உணவகம் இயங்கி வந்தது. அது சட்டவிரோதமானது எனக் கூறி, இது தொடர்பாக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இதுத் தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு அமையவே செயல்பட வேண்டும்."
உணவகத்தை நடத்துவதற்கு குறுகிய கால அனுமதி காணப்பட்டதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நவம்பர் 18ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
"சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் உள்ளனர். நாட்டின் சட்டத்தை மீறும் அல்லது எந்தவொரு சம்பவத்தின் அடிப்படையிலும் அமைதியைக் குலைக்கும் எந்தவொரு செயலையும் பொலிஸ் அனுமதிக்காது. சில அளவுகோல்களுடன் தற்காலிகமாக ஒரு உணவகத்தை அமைப்பதற்கு குறுகிய கால அனுமதி வழங்கப்பட்டது. அதை இடித்து அகற்ற உத்தரவும் உள்ளது. இதற்கிடையில், தேரர்கள் புத்தர் சிலையை அங்கு வைத்துள்ளனர்."
நவம்பர் 26 ஆம் திகதி வரை எந்த வகையான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சட்டத்தை நேரடியாக செயல்படுத்த வேண்டிய விடயங்கள் இருந்தாலும், சில விடயங்களில் 'அதனுடன் தொடர்புடைய அரசியல் நடவடிக்கைகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும்' என ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பொலிஸாரை எச்சரித்திருந்தார்.
"அந்தச் சட்டம் மற்றும் சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய சமூக அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்."
திருகோணமலையில் நடந்த புதிய புத்தர் சிலை சம்பவத்தை ஒரு சாட்டாகக் கொண்டு, 'அனுமனின் வாலில் தீ வைப்பது போல்' இனவாதிகள் செயல்பட முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு எச்சரித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொதுமக்களோ அல்லது அவர் தலைமையிலான அரசாங்கமோ இனவெறியை அனுமதிக்காது எனவும் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.
தேசிய மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைத்து வழக்குத் தொடர வழிவகுத்த ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டமைக்காக கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார, மேலும் காணிகளை வலுக்கட்டாயமாக அபகரிக்க குழுக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
"ஐம்பதுகளில் இருந்த இந்த 40 பேர்ச்சஸ் வேலையில்லை. நாங்கள் ஒரு ஏக்கர் கேட்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் போராட வேண்டும். ஏக்கரை முழுமையாக்கி அந்த இடத்தில் வேலி அமையுங்கள். அதற்கு ஒரு நாளை ஒதுக்குங்கள்" என உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- சண்.பார்த்தீபன்


