19.10.2025 - உலகச் செய்திகளின் சுருக்கம்!
பிரான்சும் அதன் சமூகப் பிரச்சினைகளும்!
???? உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு
சீன ராணுவத்தில் மாபெரும் களையெடுப்பு: ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், சீன ராணுவத்தின் மூன்றாவது உயர் அதிகாரியான ஜெனரல் ஹீ வெய்டாங் உட்பட ஒன்பது மூத்த ராணுவ அதிகாரிகள்மீது அதிபர் ஷி ஜின்பிங் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையா அல்லது அரசியல் போட்டியாளர்களை அகற்றும் முயற்சியா என்ற விவாதம் எழுந்துள்ளது.
பிரிட்டனை உலுக்கும் சீன உளவு சர்ச்சை: வர்த்தக உறவுகளைப் பாதுகாப்பதற்காக, சீனாவிற்கு ஆதரவாகச் செயல்பட்ட ஓர் உளவு விவகாரத்தைப் பிரித்தனிய அரசாங்கம் மூடி மறைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் உளவு நடவடிக்கைகள் "அன்றாட அச்சுறுத்தலாக" மாறியுள்ளதாகப் பிரிட்டனின் உள்நாட்டு உளவு அமைப்பான MI5-இன் தலைவர் எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: பல மாதங்களாக நீடித்த எல்லை மோதல்களுக்குப் பிறகு, கத்தார் மற்றும் துருக்கியின் முன்னெடுப்பில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் உடனடிப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ளன. இது தெற்காசியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
காசா குறித்து அமெரிக்காவின் எச்சரிக்கை: காசாவில் ஹமாஸ் அமைப்பு ஒரு தாக்குதலை நடத்தக்கூடும் என்பதற்குத் தங்களிடம் "நம்பகமான தகவல்கள்" இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது: பத்து ஆண்டுகளாக அமலில் இருந்த, ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான முக்கிய அணுசக்தி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்ததாக ஈரான் அறிவித்துள்ளது.
???????? பிரான்சும் அதன் சமூகப் பிரச்சினைகளும்
புலம்பெயர்ந்த குழந்தைகள் உரிமையில் பிரான்ஸ் மீது ஐ.நா. கடும் குற்றச்சாட்டு: பிரான்ஸ், துணையின்றி வரும் புலம்பெயர்ந்த குழந்தைகளின் உரிமைகளை "கடுமையாகவும், திட்டமிட்டவகையிலும் " மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. வயது நிரூபிக்க முடியாத பல குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிலிருந்து ஒதுக்கப்பட்டு, வீதிகளில் கைவிடப்பட்டு, அடிப்படை வசதிகளற்ற இழிவான நிலையில் வாழ்வதாக அந்த அறிக்கை கண்டனம் தெரிவித்துள்ளது.
மயோட்டியில் அகதிகள் முகாம் கலைப்பு: ஐ.நா.வின் குற்றச்சாட்டை உறுதி செய்வது போல, பிரெஞ்சு ஆட்சிப் பகுதியான மயோட்டியில் 650 ஆப்பிரிக்க அகதிகள் தங்கியிருக்கும் முகாம், சுகாதாரக் காரணங்களுக்காக அடுத்த வாரம் கலைக்கப்பட உள்ளது. சூறாவளியால் பல தங்குமிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே மாற்று வசிப்பிடம் வழங்கப்படும் என்பதால், பலர் மீண்டும் வீதிக்குத் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர்.
கிராமப்புறங்களில் வர்த்தகத்திற்குப் புத்துயிர்: பிரான்சின் கிராமப்புறங்களில் அருகிவரும் சிறு கடைகளைக் காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அரசின் உதவிகளுடன், பல இளைஞர்கள் புதிய கடைகளைத் திறந்து வருகின்றனர். இது உள்ளூர் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதாகக் கருதப்படுகிறது.
???????? இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் சுகாதாரச் சவாலும்
ஒருபுறம், செயற்கை நுண்ணறிவில் மாபெரும் பாய்ச்சல்: கூகுள் நிறுவனம், அமெரிக்காவிற்கு வெளியே தனது மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மையத்தை இந்தியாவில் அமைக்க 15 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் அமையவுள்ள இந்த மையம், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு மாபெரும் உந்துசக்தியாக அமையும்.
மறுபுறம், உயிரைப் பறிக்கும் மருந்து: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்தை (Coldrif) அருந்தியதால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறைந்தது 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 500 மடங்கு அதிகமாக ஆபத்தான வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது "உலகின் மருந்தகம்" என அழைக்கப்படும் இந்தியாவின் மருந்துத் துறையின் நம்பகத்தன்மையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
???? கலை, விளையாட்டு மற்றும் இதர செய்திகள்
லண்டனை ஆக்கிரமித்த சுமோ அலை: 34 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் நடைபெற்ற சுமோ மல்யுத்தப் போட்டிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐந்து நாட்களும் ரோயல் ஆல்பர்ட் அரங்கில் நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், சுமோ வீரர்கள் "பொப் ஸ்டார்கள்" போலக் கொண்டாடப்பட்டனர். அடுத்த ஆண்டு பாரிஸிலும் இதே போன்ற போட்டி நடத்தப்படவுள்ளது.
இணையத்தில் மரண விளையாட்டு: ஜெர்மனியில், "வையிட் டைகர்" என்ற புனைப்பெயரில் சமூக வலைதளங்கள்மூலம் சிறார்களையும், பதின்ம வயதினரையும் மனரீதியாகத் துன்புறுத்தி, தற்கொலைக்குத் தூண்டியதாக 21 வயது இளைஞன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


