இரகசிய பொலிஸாரின் தவறால், கடற்படை ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதில் தாமதம்
2008-09 காலப்பகுதியில் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்திக் கொண்டு போய் திருகோணமலை கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக விசாரணை
ஒருவரை காணாமலாக்கியமை குறித்த விசாரணை தொடர்பாக பத்து மாதங்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடற்படைத் தளபதியிடம் கோரிய ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும், அதற்குக் காரணம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முறையான நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
திருகோணமலையின் பிரபல ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமை கண்காணித்ததன் பின்னர் அங்கு செயற்படும் விசேட புலனாய்வுப் பிரிவு எனும் குழுவை கலைக்குமாறு கோரி அன்றைய கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக பணியாற்றிய நிஷாந்த உலுகேதென்னவால் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியை கடற்படை தமக்கு வழங்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தது.
கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவீர கடத்தப்பட்டு, திருகோணமலையில் உள்ள 'கன்சைட்' கடற்படை சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (செப்டெம்பர் 10) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கடற்படையிடம் கோரப்பட்ட அறிக்கைகள் இன்றுவரை வழங்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீண்டும் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னாண்டோ, உரிய நடைமுறைக்கு ஏற்ப கோரிக்கையை முன்வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததாக, வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன தெரிவித்தார்.
"இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் கடற்படைத் தளபதியிடம் கோரப்பட்ட ஆவணங்கள் 2024 ஆம் ஆண்டு பத்தாவது மாதத்தின் 4ஆம் திகதி வரை கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது, மேலும் இது தொடர்பாக நீதித்துறை உதவியைப் பெற கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில், இது தொடர்பாக உரிய நடைமுறைக்கு ஏற்ப கோரிக்கை முன்வைக்குமாறு கௌரவ நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்தார்."
முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சாட்சியங்களை முன்வைக்கத் தவறியதால், வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமாறு அட்மிரல் உலுகேதென்னவின் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி மகேஷ் கிருஷாந்த விடுத்த கோரிக்கையை நிராகரித்த பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னாண்டோ நிராகரித்தார்.
இதற்கமைய, சாந்த சமரவீர கடத்தப்பட்டு திருகோணமலையில் உள்ள 'கன்சைட்' கடற்படை சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நேற்றைய தினம் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன, இந்த முறை சூம் தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சாந்த சமரவீர சிறையில் அடைக்கப்பட்ட அதே கன்சைட் சித்திரவதை முகாமில் டுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் உட்பட பதினொரு நபர்களில் பலரின் தாய்மார்களும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன் பொல்கஹவெல நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
சாந்த சமரவீர கடத்தப்பட்டு, 'கன்சைட்' கடற்படை சித்திரவதைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து தலைமை பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க தலைமையில் விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்தது.
இலங்கை கடற்படையால் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய 2009ஆம் ஆண்டில் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அட்மிரல் உலுகேதென்ன மூன்று மாதத்திற்கும் மேற்பட்ட காலம் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றினார்.
2010 ஒக்டோபர் முதலாம் திகதி கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் அப்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் சோமதிலக திசாநாயகவிடமிருந்து பெற்ற எழுத்து மூல அனுமதிக்கு அமைவாக திருகோணமலை கன்சைட் முகாமை பார்வையிடுவதற்குச் சென்றதாக சிரிசோம உலுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது.
அதன்போது அங்கு 40 - 60 நபர்களை தடுத்து வைத்திருந்ததாக உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்ததாக அத்திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
2010 ஜூலை 22 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் காணாமலாக்கப்பட்ட கனேராலலாகே சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கன்சைட் கடற்படை வதை முகாம் அப்போது கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியான அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 28 ஆம் திகதி கைது செய்தது.
திருகோணமலை நிலக்கீழ் கன்சைட் முகாம் தமது பொறுப்பில் இருந்தாலும் அங்கு விசேட புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் அறியப்படும் ஓர் அலகு செயற்பட்டதாகவும் அது கடற்படை புலனாய்வுப் பிரிவால் செயற்படுத்தப்பட்ட அலகு அல்ல எனவும் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடற்கரையின் உளவுப் பிரிவுடன் தொடர்பற்றது எனக் கூறப்படும் அந்த புலனாய்வுப் பிரிவுக்கு அப்போது கமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க கட்டளை வழங்கியதாகவும் கடற்படையின் உறுப்பினர்களான ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி மற்றும் கௌசல்யா ஆகிய அறுவர் அவரின் கீழ் இருந்ததாகவும் அந்த விசேட புலனாய்வுப் பிரிவு தம்மால் கலைக்கப்பட்டதாகவும் அட்மிரல் உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
2008-09 காலப்பகுதியில் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்திக் கொண்டு போய் திருகோணமலை கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக விசாரணை செய்யும் இரகசியப் பொலிஸ் அதிகாரிகளிடம் சுமார் ஓராண்டு காலம் கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜயகாந்த் என்ற பொடிமல்லி என்பவர் சாந்த சமரவீர தன்னுடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார்.
இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் நிசங்சல விதானாரச்சி என்பவரும் அவர்களுடன் இருந்ததாக பொலிசார் மேலும் கண்டுபிடித்துள்ளனர்.


