அரசியல் என்பது ஒரு சிக்கலான சதுரங்க வேட்டை!
எதிர்ப்பு அரசியலும் போராட்ட அரசியலும்: பிழைப்புவாதத்தின் நாடகமும் இலட்சியவாதத்தின் நெருப்பும்
அரசியல் என்பது ஒரு சிக்கலான சதுரங்க வேட்டை. இதில் மக்களின் கண்களுக்குத் தெரிவது வெறும் காய்களின் நகர்வுகள் மட்டுமே; ஆனால் அந்த நகர்வுகளைத் தீர்மானிக்கும் கரங்களும், அதன்பின் உள்ள வியூகங்களும் பெரும்பாலும் திரைமறைவிலேயே இயங்குகின்றன. சமகால அரசியலில், குறிப்பாக ஒடுக்கப்பட்ட அல்லது உரிமை மறுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் களத்தில், மக்கள் மிக எளிதாக ஏமாந்து போகும் இரண்டு சொல்லாடல்கள் உள்ளன. அவை: ‘எதிர்ப்பு அரசியல்’ (Opposition Politics) மற்றும் ‘போராட்ட அரசியல்’ (Struggle Politics).
மேலோட்டமாகப் பார்க்கும்போது இரண்டும் அதிகாரத்தை எதிர்ப்பது போலவும், மக்களின் குரலாக ஒலிப்பது போலவும் தோன்றும். ஆனால், தத்துவார்த்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணானவை. சுருக்கமாகச் சொல்வதானால், போராட்ட அரசியல் என்பது ஒரு உயர்ந்த இலக்கை நோக்கமாகக் கொண்டது; ஆனால் எதிர்ப்பு அரசியல் என்பது வெறும் பிழைப்பை நோக்கமாகக் கொண்டது.
எதிர்ப்பு அரசியல்: ஓர் இருத்தலியல் நாடகம்.
எதிர்ப்பு அரசியல் (Opposition Politics) என்பது அடிப்படையில் ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட நாடகம். இது அதிகாரத்தை முழுமையாக வீழ்த்துவதற்கோ அல்லது அமைப்பை அடியோடு மாற்றுவதற்கோ விரும்புவதில்லை. மாறாக, அந்த அதிகார அமைப்பிற்குள் தனக்கான ஒரு பாதுகாப்பான இடத்தையும், சலுகைகளையும் தக்கவைத்துக்கொள்ளவே இது செயல்படுகிறது.
ஒரு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், ஆளுங்கட்சிக்கு ஒரு எதிர்க்கட்சி தேவை. அதுபோலவே, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் எப்போதும் இருக்கும். பொதுவெளியில், ஊடகங்களின் கேமராக்களுக்கு முன்னால் அவர்கள் கீரியும் பாம்புமாகச் சீறுவார்கள். ஆனால் திரைமறைவில், தங்களின் இருப்பு கேள்விக்குறியாகாமல் இருக்கத் தேவையான உடன்பாடுகளைச் செய்துகொள்வார்கள்.
இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகள் சில முன்னெடுக்கும் ‘எதிர்ப்பு அரசியல்’ இதற்கு மிகச் சிறந்த சமகால உதாரணம். பல தசாப்தங்களாக நீளும் இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வுக்கு எந்தவிதமான உருப்படியான செயல் திட்டமும் இவர்களிடம் இல்லை. தீர்வுக்காக போராடுகிறோம் என்று கட்டிக்கொள்வதுதான் மக்களிடம் சென்று வாக்குக் கேட்பதற்கு இந்த அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அட்ஷயபாத்திரம் . எனவே, ‘இனப் பிரச்சினை’ என்பது அவர்கள் பிழைப்பு நடத்துவதற்கான மூலதனமாக மாறிவிடுகிறது. இங்கே எதிர்ப்பு அரசியல் என்பது ஆளுங்கட்சியுடன் (அல்லது பெரும்பான்மை வாதத்துடன்) திரைமறைவு உடன்பாட்டுடன் நடத்தப்படும் ஒரு சுவாரஸ்யமான நாடகம்.
ஆளுங்கட்சி, தமிழர்களின் உரிமைகளை மறுக்கும் சில சட்டங்களையோ நகர்வுகளையோ முன்னெடுக்கும். உடனடியாக தமிழ் அரசியல்வாதிகள் அதை எதிர்த்து முழக்கமிடுவார்கள், அறிக்கைகளை வெளியிடுவார்கள்.
இந்தச் சத்தத்தின் மூலம் தாங்கள் மட்டுமே தமிழர்களின் பாதுகாவலர்கள் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் தக்கவைத்துக்கொள்வார்கள்.
ஆனால், இந்த எதிர்ப்பின் மூலம் எதையும் சாதித்துவிட மாட்டார்கள். ஏனென்றால், ஆளுங்கட்சிக்கும் இவர்களது எதிர்ப்பு தேவைப்படுகிறது; இவர்களுக்கும் ஆளுங்கட்சியின் அடக்குமுறை தேவைப்படுகிறது. “நீ அடிப்பது போல நடி, நான் அழுவது போல நடிக்கிறேன்” என்ற இந்தச் சமன்பாடு இரு தரப்பின் அரசியல் இருப்புக்கும், வாக்கு வங்கியைத் தக்கவைப்பதற்கும் அவசியமாகிறது.
இதுவே எதிர்ப்பு அரசியலின் தத்துவார்த்த பிழைப்புவாதம். இதுதான் 1910 மன்னிங் சீர்திருத்த ஆட்சிக்காலத்திலிருந்து இன்றையை அனுர குமார திசாநாயக்க ஆட்சிக்காலம் வரை நடக்கிறது ஜேவிபி யுத்தத்துக்கு ஆட் சேர்த்து கொடுத்தது என்று முழங்கும் இவர்கள் (எந்த தமிழ் கட்சியாவது) போராட்டதுக்கு ஆட் சேர்த்து கொடுத்திருக்கிரர்களா?என்றால் பதில் சொல்லமாட்டார்கள் ???? பிரித்தானியர்களால் சிலோன் என்ற ஒற்றையாட்சிக்குள் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட தமிழீழத்தின் இறைமை 1972 மே யில் கொண்டுவரப்பட்ட ஸ்ரீலங்கா சோஷலிச குடியரசு யாப்பிப்பின் மூலம் செல்லுபடியற்றதாகும் நிலை இருந்தபோது, அந்த குடியரசு யாப்பை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து மீண்டும் எமது இறைமையை ஸ்ரீலங்காவிடம் அடிமைப்படுத்திய வரலாற்று துரோகத்தை பற்றி தப்பி தவறி யாரும் இவர்களிடம் கேட்டு விடாதீர்கள்.
போராட்ட அரசியல்: இலக்கைத் தேடும் பயணம்
இவர்களது இந்த பம்மாத்து அரசியலுக்கு நேர்மாறானது போராட்ட அரசியல். இது வாக்குச் சீட்டுகளுக்காகவோ, நாடாளுமன்றக் கதிரைகளுக்காகவோ, சலுகைகளுக்காகவோ நடத்தப்படுவதில்லை. இதன் ஒட்டுமொத்த கவனமும் ‘இலக்கை’ (The Ultimate Goal) நோக்கியே இருக்கும். தத்துவார்த்த ரீதியில், போராட்ட அரசியல் என்பது சமரசமற்றது. அது அதிகார அமைப்பிற்குள் தனக்கான இடத்தைத் தேடாது; அந்த அதிகார அமைப்பையே மக்களுக்கானதாக மாற்ற நினைக்கும்.
எதிர்ப்பு அரசியல் அடுத்த தேர்தலை பிழைப்பு வாதத்தை நோக்கமாகக் கொண்டது. போராட்ட அரசியல் அடுத்த தலைமுறையை நோக்கமாகக் கொண்டது.
போராட்ட அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கையையோ, லாபங்களையோ இழக்கத் தயாராக இருப்பார்கள். அவர்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவார்கள், சிறை செல்வார்கள், ஏன் தங்கள் உயிரையும் பணயம் வைப்பார்கள். இலங்கைத் தமிழர் வரலாற்றில் , ஆரம்பக் காலங்களில் வலுவாக இருந்த உரிமைப் போராட்டங்கள் இந்த வகையைச் சேர்ந்தவையே. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்பிய பல அரசியல் தலைமைகள், அந்தப் ‘போராட்ட அரசியலை’ வசதியாகக் கைவிட்டுவிட்டு, பாதுகாப்பான ‘எதிர்ப்பு அரசியலுக்குள்’ தங்களை சுருக்கிக் கொண்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும் .
ஒரு அரசியல் கட்சி அல்லது இயக்கம் முன்னெடுப்பது நாடகமா (எதிர்ப்பு) அல்லது நிஜமா (போராட்டம்) என்பதைப் பின்வரும் நடைமுறை அளவுகோல்களைக் கொண்டு அளவிடலாம்:
சமரசம் (Compromise): எதிர்ப்பு அரசியல்வாதிகள் எதிரிக்கு எப்போது அரசியல் தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இவர்கள் விழித்துக்கொள்வார்ர்கள்.ஆர்ப்பாட்டம்,போராட்டம் ,அறிக்கை போர் எல்லாம் தூள் பறிக்கும். இவர்களது இந்த செயற்பாடுகளை வைத்து எதிரிகள் தங்களது எதிர்ப்பரசியலை ஆரம்பித்தவுடன் இவர்கள் தங்களுது செயற்பாடுகளை மூட்டை கட்டி வைத்துவிடுவார்கள் .தீர்வு கிடைக்கும் வரை ,இடைவிடாத தொடர் போராட்டம்,தொடர் மறியல் ,தொடர் முடக்கம் இதெல்லாம் இவர்களது அகராதியில் கிடையாது . ஆனால் உண்மையான போராட்ட அரசியல்வாதிகள் இலக்கு எட்டப்படும் வரை சமரசம் செய்ய மாட்டார்கள்.
பொறுப்புக்கூறல் (Accountability): எதிர்ப்பு அரசியல் எப்போதுமே தோல்விக்கான பழியை ஆளுங்கட்சியின் மீதோ அல்லது வேறு சக்திகளின் மீதோ சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்ளும். "நாங்கள் எவ்வளவோ முயன்றோம், அவர்கள் தரவில்லை" என்பது இவர்களின் தாரக மந்திரம். ஆனால் போராட்ட அரசியல், தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தன் வியூகங்களை மாற்றியமைக்கும்.
மக்களின் பங்களிப்பு: எதிர்ப்பு அரசியல், மக்களை வெறும் பார்வையாளர்களாகவும் வாக்காளர்களாகவும் மட்டுமே வைத்திருக்கும். ஆனால் போராட்ட அரசியல், மக்களை களமிறக்கி அவர்களைக் கர்த்தாக்களாக (Agents of Change) மாற்றும்.
சுருக்கமாகச் சொன்னால், எதிர்ப்பு அரசியல் என்பது ஆற்றில் மிதக்கும் ஒரு படகு போன்றது. அது நீரோட்டத்தின் திசையிலேயே பயணிக்கும்; இடையிடையே துடுப்புகளைப் போட்டுத் தண்ணீர் தெளித்து, தாங்கள் ஏதோ பயணிப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கும். ஆனால் போராட்ட அரசியல் என்பது நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும் செயல். அதற்கு அபாரமான பலமும், தியாகமும், இலக்கின் மீதான தீராக் காதலும் தேவை.ஆயத போராடடம் மட்டும் தன போராட்ட அரசியல் என்றில்லை .ஆயுதமேந்தாத அரசியல் போராடத்திலும் போராட்ட அரசியல் உள்ளது .
எனவே இன்றைய அரசியல் சூழலில், மக்களாகிய நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், மேடைகளில் முழங்கும் ‘எதிர்ப்பு அரசியல்’ நாடகக்காரர்களை உண்மையான ‘போராட்டவாதிகள்’ என்று நம்பி ஏமாறுவதுதான். பிழைப்பைத் தேடும் அரசியலுக்கும், இலக்கைத் தேடும் அரசியலுக்கும் உள்ள இந்த நுண்ணிய வேறுபாட்டைப் புரிந்துகொள்வதுதான், ஒரு சமூகம் அரசியல் முதிர்ச்சி அடைவதற்கான முதல் படியாகும்.
-சிவா சின்னப்பொடி


