கொண்டாட்ட பலூன்களில் பதுங்கியிருக்கும் பேராபத்து!
பிரெஞ்சு நுகர்வோர் பாதுகாப்புத் தளமான 'Rappel Conso' இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை! உங்கள் கொண்டாட்ட பலூன்களில் பதுங்கியிருக்கும் பேராபத்து!
வீட்டில் விசேஷமா? குழந்தையின் பிறந்தநாளா? உடனே ஒன்லைனில் கலர் கலராகப் பலூன்களுக்கு வாங்கும் கோரிக்கையைப் பதிவு செய்துவிடுவீர்கள் . ஆனால், நீங்கள் வாங்கும் அந்த அழகான பலூன்கள், கொடிய நோய்க்குக் காரணமாகலாம் என்று தெரியுமா?
ஆம், அமேசான் (Amazon) மற்றும் பிற ஒன்லைன் தளங்களில் விற்கப்பட்ட சில பிறந்தநாள் பலூன் பேக்குகள், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான ரசாயனங்களைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு நுகர்வோர் பாதுகாப்புத் தளமான 'Rappel Conso' இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தக் கொண்டாட்ட பலூன்களில் "நைட்ரோசமைன்கள்" (Nitrosamines) எனப்படும் ரசாயனம், அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நைட்ரோசமைன்கள், தோலின் வழியாகவோ அல்லது வாய் வழியாகவோ உடலுக்குள் சென்றால் புற்றுநோயை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை.
நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, பலூன்களை வாயால் ஊதுவது. குழந்தைகள் அப்படி ஊதும்போதோ அல்லது பலூன்களுடன் விளையாடிவிட்டு அதே கையை வாயில் வைக்கும்போதோ, இந்த நச்சு ரசாயனம் நேரடியாக உடலுக்குள் சென்றுவிடும்.
Rappel Conso அதிகாரிகள் மூன்று குறிப்பிட்ட தயாரிப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளனர். அவை அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையானவை:
Fakindiy பிராண்ட்: 100 மல்டி-கலர் (pastel) லேடெக்ஸ் பலூன்கள் (ASIN: B0DRS6XQGT)
Epokus பிராண்ட்: உள்ளே ஒளிர்கின்ற துகள் (confetti) கொண்ட பல வண்ண பலூன்கள் (ASIN: B0CY2FCK2X)
Luobito பிராண்ட்: 130 தங்க நிற லேடெக்ஸ் பலூன்கள் (ASIN: B0D12DG3Q6)
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
வாயால் ஊதாதீர்கள்: உங்களிடம் எந்த வகை லேடெக்ஸ் பலூன் இருந்தாலும், குறிப்பாக ஒன்லைனில் வாங்கியதாக இருந்தால், தயவுசெய்து அவற்றை வாயால் ஊத வேண்டாம். (பம்ப் பயன்படுத்தலாம், ஆனால் இந்தக் குறிப்பிட்ட தயாரிப்புகளைத் தொடவே வேண்டாம்).
நீங்கள் மேலே குறிப்பிட்ட பிராண்ட் பலூன்களை வாங்கியிருந்தால், அவற்றை உடனடியாகக் குழந்தைகளிடமிருந்து அகற்றி, பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடுங்கள்
அடுத்த முறை கொண்டாட்டங்களுக்கு திட்டமிடும்போது, கொண்டாட்டப் பொருட்களின் பாதுகாப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது அவசியம்!


