கரூர் சம்பவம் எதிரொலி: நவம்பர் 6-இல் கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம் - யார் யாருக்கு அழைப்பு?
நவம்பர் 6ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம்!
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கரூரில் தவெக கூட்டத்தில் நடந்த கூட்டநெரிசல் சம்பவத்தின் எதிரொலியாக வரும் 6ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அரசியல் கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ ஆகியவற்றை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வகுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக சார்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழத்தையும் தாண்டி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என ஆளுங்கட்சியும், போலீசாரும் குற்றம்சாட்டினர். ஆனால், கேட்ட இடத்தை தராமல் குறுகலான இடத்தை வழங்கியதே கூட்டநெரிசலுக்கு காரணம் என தவெக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை அண்மையில் தாக்கல் செய்தது. இதனிடையே, இந்தக் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் இப்படியொரு கோர நிகழ்வு நடப்பதை தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு தற்போது அழைப்பு விடுத்துள்ளது. வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற - சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழக மூத்த அமைச்சர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் அரசியல் கட்சிக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை நடத்துவது எப்படி? அதற்கு அனுமதி வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன? கூட்டத்தை ஒருங்கிணைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? கூட்டம் நடத்தும் அரசியல் கட்சித் தலைவரின் கடமைகள் என்ன? என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வகுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


