புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து வலுவிழக்கும் டிட்வா புயல்!
காரைக்கால்,சென்னையில் இருக்கும் டாப்ளர் வானிலை ரேடார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது,
டிட்வா புயலானது நண்பகல் வாக்கில் வடதமிழகம் - புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 27 அன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான ‘டிட்வா புயல்’, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் நிலைகொண்டது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக - புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நிலவிய ‘டிட்வா புயல்’ மணிக்கு 10 கி.மீ என்ற வேகத்தில் வடதிசையில் நகர்ந்து, சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 90 கி.மீ தொலைவிலும, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வடக்கு-வடகிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதிக்கும் வடதமிழக-புதுச்சேரி கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 50 கிலோ மீட்டராக இருந்தது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 1) காலையில் வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையிலிருந்து 30 கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, நண்பகல் வாக்கில் வடதமிழகம்-புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரைக்காலிலும் சென்னையிலும் இருக்கும் டாப்ளர் வானிலை ரேடார் மூலம் தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டிட்வா புயலால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் புயல் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.


