பிரான்சில் பெயர் மாற்றம் ! இதோ ஒரு முக்கியமான எச்சரிக்கை! 3 மாதங்களில் உங்கள் பழைய அடையாள அட்டைகள் செல்லாது!
அடையாள அட்டை (Carte d'Identité) மற்றும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். தவறினால், உங்கள் பழைய ஆவணங்கள் தானாகவே செல்லாததாகிவிடும்.
பிரான்சில் பெயர் மாற்றம் ! இதோ ஒரு முக்கியமான எச்சரிக்கை! 3 மாதங்களில் உங்கள் பழைய அடையாள அட்டைகள் செல்லாது!
பிரான்சில் நீங்கள் உங்கள் பெயர் அல்லது குடும்பப் பெயரை மாற்றத் திட்டமிட்டால், இந்தச் செய்தி உங்களுக்குத்தான்! அரசு ஒரு புதிய, மிகக் கடுமையான விதியைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, உங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, வெறும் 3 மாதங்களுக்குள் உங்கள் அடையாள அட்டை (Carte d'Identité) மற்றும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். தவறினால், உங்கள் பழைய ஆவணங்கள் தானாகவே செல்லாததாகிவிடும்.
ஏன் இந்த அதிரடி மாற்றம்?
இந்த புதிய விதிமுறை, ஜூலை 5, 2024 திகதியிட்ட அரசாணையின்படி அமலுக்கு வந்துள்ளது. இதன் முக்கிய நோக்கங்கள்:
• மோசடியைத் தடுத்தல்: ஒருவர் தனது பழைய பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பது.
• ஒரே சீரான அடையாளம்: ஒரு நபருக்குரிய அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் ஒரே பெயர் இருப்பதை உறுதி செய்தல்.
• நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்த்தல்: அரசு அலுவலகங்கள் அல்லது எல்லைக் கட்டுப்பாடுகளின்போது ஏற்படும் குழப்பங்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்ப்பது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1. உங்கள் பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யப்பட்டவுடன், 3 மாத காலக்கெடு தொடங்குவது குறித்து உங்களுக்கு SMS அல்லது கடிதம்மூலம் தகவல் அனுப்பப்படும்.
2. உடனடியாக உங்கள் பகுதி நகரசபை அலுவலகத்தில் (Mairie) சந்திப்புக்கு (rendez-vous) ஏற்பாடு செய்து, உங்கள் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
3. காலக்கெடு முடிவதற்குள் உங்கள் பழைய ஆவணங்களைக் காட்டிப் புதுப்பித்தால், இந்தச் சேவை முற்றிலும் இலவசம்.
4. புதிய அடையாள அட்டைகள் கிடைத்தவுடன், ANTS இணையதளத்தில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் (Permis de conduire), Ameli கணக்குமூலம் உங்கள் மருத்துவ அட்டையையும் (Carte Vitale) புதுப்பித்துக் கொள்ளலாம்.
காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும்?
இதுதான் மிக முக்கியமான பகுதி. நீங்கள் 3 மாதங்களுக்குள் ஆவணங்களைப் புதுப்பிக்கத் தவறினால்,மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்:
• பயணத் தடை மற்றும் நிர்வாக முடக்கம்: செல்லாத அடையாள அட்டையுடன் நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்க முடியாது. வங்கிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் உங்கள் ஆவணங்கள் நிராகரிக்கப்படும். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரிய சிக்கல்களை உருவாக்கும்.
• கடும் சட்ட நடவடிக்கை: பிரெஞ்சு குற்றவியல் சட்டத்தின் (Code pénal) பிரிவு 441-2-இன் படி, போலியான அல்லது திருத்தப்பட்ட அடையாள அட்டையைப் பயன்படுத்துவது ஒரு கடுமையான குற்றமாகும்.. இதற்கு 75,000 யூரோ அபராதம் மற்றும் 5 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
தொடர்ச்சியாக இந்தத் தவறைச் செய்பவர்களுக்குத் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும். அவர்களுக்கு 100,000 யூரோ அபராதம் மற்றும் 7 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
எனவே, பெயர் மாற்றும் திட்டத்தில் இருந்தால், இந்த 3 மாத காலக்கெடுவை மனதில் கொண்டு உடனடியாகச் செயல்படுங்கள். தேவையற்ற சட்டச் சிக்கல்களையும், கடுமையான தண்டனைகளையும் தவிர்த்திடுங்கள்!
சிவா சின்னப்பொடி


