பிரான்சின் புதிய அமைச்சரவை நியமனம்!
ரோலண்ட் லெஸ்குர் புதிய பொருளாதார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பிரான்சில் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிலவி வந்த அரசியல் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிவிக்கப்பட்ட இந்த அரசில், பழைய ஆட்சியாளர்களுக்கே அதிக முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னாள் பொருளாதார அமைச்சர் புருனோ லு மேரின் திடீர் மறுவருகை, அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நிறைவின்மையே மிஞ்சியது. உள்துறை அமைச்சராகப் புருனோ ரிடெய்லோ, நீதித்துறை அமைச்சராக ஜெரால்ட் டார்மனன், கல்வி அமைச்சராக எலிசபெத் போர்ன் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராக ரஷிதா தா(த் )தியென 12 முதன்மை அமைச்சர்கள் தங்களது பொறுப்புகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இது அரசின் கொள்கைகளில் ஒரு தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சியெனக் கருதப்படுகிறது.
இந்த அமைச்சரவை அறிவிப்பின் மிகப்பெரிய வியப்பு, புருனோ லு மேரின் வருகைதான். 2017 முதல் 2024 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பொருளாதார அமைச்சராக இருந்து, பிரான்சின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அவர், அரசியலிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது, யாரும் எதிர்பாராத வகையில், நாட்டின் மிக இன்றியமையாத பாதுகாப்புத் துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். இது அரசின் பாதுகாப்புக் கொள்கைகளில் ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
ரோலண்ட் லெஸ்குர் புதிய பொருளாதார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
எரிக் வொர்த் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்பியுள்ளார்.
புதியவர்கள்: மத்தியூ லெஃபே மற்றும் நைமா மௌட்சூ ஆகிய இருவரும் முதல் முறையாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
லெகோர்னுவின் அரசு ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் புருனோ ரிடெய்லோவே தனது மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளார்.
"அரசாங்கத்தின் அமைப்பு, உறுதியளிக்கப்பட்ட மாற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை. நாட்டில் மக்ரோன் ஆதரவாளர்கள் குறைவாக இருந்தாலும், அரசில் அவர்கள் அதிகமாக உள்ளனர்," என்று அவரது தரப்பு கடுமையாகச் சாடியுள்ளது. இது ஆளும் கூட்டணிக்குள் தொடக்கத்திலேயே விரிசல் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு நாடாளுமன்றத்தில் அரசின் கொள்கை விளக்க உரையை ஆற்ற உள்ளார். மேலும் சில துணை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் பட்டியல் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


