18.10.2025 - உலகச் செய்திகளின் சுருக்கம்!
நெதன்யாகுவின் மேல்முறையீடு நிராகரிப்பு!, டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் மாபெரும் போராட்டம்
✹ பிரான்சின் கடன் மதிப்பீடு குறைப்பு
புகழ்பெற்ற S&P நிறுவனம், பிரான்சின் பொது நிதி நிலைகுறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரிக்கும் கடன் காரணமாக, அதன் கடன் மதிப்பீட்டை 'A+' ஆகக் குறைத்துள்ளது. இது சமீபத்தில் பதவியேற்ற லெகோர்னு அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
✹ டிக்கெட் மோசடிக்கு டிஜிட்டல் முற்றுப்புள்ளி
கச்சேரிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்கும் மோசடியைத் தடுக்க, AXS என்ற புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு 60 வினாடிக்கும் மாறும் QR குறியீட்டைக் கொண்டிருப்பதால், ஸ்கிரீன்ஷோட் எடுத்து ஏமாற்ற முடியாது. இதன் மூலம் உண்மையான இரசிகர்கள் சரியான விலையில் டிக்கெட் பெற வழிவகை செய்யப்படுகிறது.
✹ உலகை உலுக்கும் 'Gen Z' இளைஞர்கள்
மடகாஸ்கர், மொராக்கோ, நேபாளம் போன்ற நாடுகளில் 'Gen Z' தலைமுறை இளைஞர்கள் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சமூக ஊடகங்கள்மூலம் ஒழுங்கமைக்கப்படும் இவர்கள், ஊழல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். சில நாடுகளில் அரசாங்கங்களையே மாற்றும் அளவிற்கு இவர்களின் சக்தி வாய்ந்த போராட்டங்கள் அமைந்துள்ளன.
✹ 18 கோடி ஆண்டுகள் பழமையான ராட்சத முதலை
பிரான்சின் Lodève அருங்காட்சியகத்தில், 180 மில்லியன் ஆண்டுகள் பழமையான, சுமார் 5 மீட்டர் நீளமுள்ள ராட்சத முதலையின் முழுமையான புதைபடிவம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 2013-ல் ஒரு வழிப்போக்கரால் கண்டுபிடிக்கப்பட்ட இது, ஒரு புதிய உயிரினமாக இருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
✹ நெதன்யாகுவின் மேல்முறையீடு நிராகரிப்பு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராகப் போர்க்குற்றங்களுக்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை எதிர்த்து இஸ்ரேல் செய்த மேல்முறையீட்டை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிராகரித்துள்ளது. இதனால் அவர்மீதான சட்ட நடவடிக்கை தொடர்கிறது.
✹ டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் மாபெரும் போராட்டம்
'No Kings' என்ற இயக்கத்தின் தலைமையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் 'அதிகார துஷ்பிரயோகத்தை' எதிர்த்து, நியூயார்க் முதல் சான் பிரான்சிஸ்கோ வரை லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற உள்ளன.
✹ மடகாஸ்கரின் புதிய தலைவர் யார்?
மக்கள் புரட்சியை அடுத்து மடகாஸ்கரின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள கர்னல் மைக்கேல் ரண்ட்ரியனரினா, முன்னாள் அதிபரால் கைதுச் செய்யப்பட்டவர். இளைஞர்களின் 'Gen Z' போராட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் இவர் ஆட்சிக்கு வந்துள்ளார். இது இராணுவப் புரட்சி அல்ல என்று கூறும் இவர், 24 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
✹ ஐரோப்பாவில் ஓட்டுநர் உரிமத்தில் புதிய விதிகள்
2030-க்குள் ஓட்டுநர் உரிமம் மொபைல் போனில் டிஜிட்டல் மயமாகும். ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் விதிக்கப்படும் ஓட்டுநர் தடை, இனி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பொருந்தும். மேலும், ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்குவது அந்தந்த நாடுகளின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது.
✹ பிரான்ஸ் ஓய்வூதியதாரர்களுக்கு ஏமாற்றம்
பிரான்சில் தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் (Agirc-Arrco) இந்த ஆண்டு உயர்த்தப்படாது. தொழிற்சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நவம்பர் மாத உயர்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
✹ வீட்டு முன் உதிரும் இலைகளை யார் சுத்தம் செய்வது?
இலையுதிர் காலத்தில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள நடைபாதையில் குவியும் இலைகளை அள்ளுவது நகராட்சியின் கடமை என்றாலும், பல சமயங்களில் அது வீட்டு உரிமையாளரின் பொறுப்பாகும். இதைச் செய்யத் தவறினால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.


